மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது அதிகரித்து வருகிறது எச்.ராஜா குற்றச்சாட்டு


மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது அதிகரித்து வருகிறது எச்.ராஜா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Nov 2017 11:30 PM GMT (Updated: 29 Nov 2017 6:44 PM GMT)

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

கோவை,

கோவையில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், ஆனந்த் என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மண்எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு விட்டு தப்பி விட்டதாக தகவல் வருகிறது. ஆனால் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கின்றது. ஆனால் கோவையில் ஸ்மார்ட் சிட்டிக்கான முதன்மை செயல் அதிகாரி கூட இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு கழிவறை கட்டிக்கொடுக்கும் திட்டம், பிரதமரின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும்போது, பயனாளிகளை தேர்வு செய்து திட்ட பயனை வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். பிரதமரின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிகளிடமும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் அதிகாரிகள் லஞ்சம் பெறுகிறார்கள். முன்பு உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தபோது உள்ள நிலையை விட இப்போது லஞ்ச குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்து 420 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு சம்பளம் கிடையாது. ஆனால் கோவில் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. கோவில்களை நிர்வகிக்க முடியாவிட்டால் இந்து அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்.

மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்ய மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். மணல் குவாரிகளை பொறுத்தவரை கோர்ட்டில் இருந்து இறுதி முடிவுகள் வரட்டும். அதன்பிறகு பேசலாம். நியூட்ரினோ, மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விஞ்ஞானிகளிடம் விட்டுவிடுவோம். எந்த ஒரு திட்டத்தையும் மாநில அரசும், மக்களும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதனை செயல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் குறித்தும், தேர்தலில் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் கட்சி தலைமைதான் முடிவு செய்யும். தனிப்பட்ட முறையில் நான் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன். கேரள பெண் ஹாதியா விவகாரம் குறித்தும் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story