குற்றவாளிகளுக்கு தூக்கு: முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் தலைவர்கள் வரவேற்பு


குற்றவாளிகளுக்கு தூக்கு: முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அரசியல் தலைவர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Nov 2017 10:50 PM GMT (Updated: 29 Nov 2017 10:50 PM GMT)

கோபர்டி சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர் கருத்து தெரிவித்தனர்.

மும்பை,

அகமத்நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தில் 15 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கும் விரைவு கோர்ட்டு நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதுபற்றி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த வழக்கில் போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகளும், அரசு வக்கீல் உஜ்வால் நிகாமும் சிறப்பாக பணியாற்றினர். விசாரணை குறித்த காலவரையறைக்குள் நிறைவடைந்தது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

வழக்கு விசாரணையை இழுத்தடிக்க குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் எவ்வளவு தான் முயன்றாலும், அனைத்தும் பயனற்றதாகி விட்டது. இந்த தீர்ப்பையடுத்து, இறந்துபோன சிறுமியின் ஆன்மா அமைதி காணும். நீதித்துறை மீது பொதுமக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான் கூறுகையில், ‘‘முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்ததால் தான், வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று முடிந்தது. குற்றவாளிகள் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், அங்கேயும் தண்டனையை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு’’ என்றார். மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளையும் இதுபோல் துரிதமாக கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

‘‘உயர் நீதிமன்றங்கள் இந்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, குற்றவாளிகள் தூக்கில் தொங்கினால் தான் நீதி நிலைநாட்டப்பட்டதாக அர்த்தம்’’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் தனஞ்செய் முண்டே குறிப்பிட்டார்.

சிவசேனா செய்தித்தொடர்பாளர் நீலம் கோரே கூறும்போது, ‘‘பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை உணர்வுப்பூர்வமாக போலீசார் கையாள வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாக மாட்டார்கள்’’ என்றார்.

Next Story