‘கிணற்றை காணவில்லை’ என்று சினிமா பட பாணியில் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


‘கிணற்றை காணவில்லை’ என்று சினிமா பட பாணியில் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 30 Dec 2017 6:13 PM GMT)

கிணற்றை காணவில்லை என்ற நடிகர் வடிவேல் சினிமா பட பாணியில் சிங்கம்புணரி அருகே உள்ள காட்டுகருப்பன்பட்டி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்டது காட்டுகருப்பன்பட்டி. இங்கு ஆதிதிராவிடர் குடும்பங்கள் 100–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணறு மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியடைந்து வந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மழையின்றி கிணற்றில் ஊற்று இல்லாமல் வறண்டு கிடந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மழை பெய்து கிணற்றில் ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் வந்த நிலையில், மதுராபுரி ஊராட்சி நிர்வாகம் இந்த கிணற்றால் ஆபத்து இருப்பதாக கூறி எந்திரம் மூலம் கிணற்றின் சுற்றுச்சுவரை இடித்தும், கிணற்றில் மண் மேவியும் கிணற்றை மூடிவிட்டனர்.

இந்தநிலையில் தற்போது காட்டுகருப்பன்பட்டியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், கிணற்றையும் மூடிவிட்டதாலும் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் கோபி மற்றும் கிராமமக்கள் கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில், காட்டுகருப்பன்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றை காணவில்லை என்றும், எந்தவித முன்னறிவிப்பு இன்றியும், மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமலும் கிணற்றை மூட நடவடிக்கை எடுத்த ஊராட்சி செயலாளர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். நடிகர் வடிவேல் ஒரு சினிமா பட காட்சியில் தனது கிணற்றை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார். அதேபோன்று காட்டுகருப்பன்பட்டி கிராமமக்கள் கிணற்றை காணவில்லை என்று மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கோபி கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக பல ஆண்டுகளாக இருந்த கிணற்றை மூடிவிட்டனர். வறட்சி காலத்தில் கூட அந்த கிணற்றில் தண்ணீர் இருக்கும். ஆனால் 2 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. மழையில்லாததே அதற்கு காரணம். ஆனால் ஊராட்சி நிர்வாகம் ஆபத்தாக இருப்பதாக கருதி மூடிவிட்டது. எந்தவித முன்னறிவிப்பு இன்றி ஊராட்சி செயலாளர் மகேஷ் கிணற்றை மூட நடவடிக்கை எடுத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்தும், சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்திற்கு வந்து ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஆதிதிராவிட நல வாரியத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.


Next Story