உல்லாஸ்நகரில் போக்குவரத்து போலீஸ்காரர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


உல்லாஸ்நகரில் போக்குவரத்து போலீஸ்காரர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 30 Dec 2017 11:01 PM GMT (Updated: 30 Dec 2017 11:01 PM GMT)

உல்லாஸ்நகரில் போக்குவரத்து போலீஸ்காரர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர், நேரு சவுக் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் போலீஸ்காரர்கள் ஜித்தேந்திரா, சஞ்சய் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. இதனைக்கண்ட போக்குவரத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்து நிறுத்தினர்.

மேலும் அதனை ஓட்டி வந்த வாலிபரிடம் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்கும்படி கேட்டனர். அதற்கு அவரும், அவருடன் வந்த மற்றொரு வாலிபரும் போலீஸ்காரர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது போலீசார் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் போலீஸ்காரர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கினர். முதலில் அதிர்ச்சி அடைந்த போலீசார் பின்னர் சுதாரித்து கொண்டு தங்களை தாக்கிய வாலிபர்களை பிடித்தனர். பின்னர் அவர்களை உல்லாஸ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், வாலிபர்கள் 2 பேரும் பிவண்டியில் உள்ள கோன்காவ் பகுதியை சேர்ந்த மித்தேஷ் (வயது 19), சந்தோஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.


Next Story