மனைவியை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 8:45 PM GMT)

புதுச்சத்திரம் அருகே மனைவியை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

கடலூர்,

மனைவியை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்த கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

புதுச்சத்திரம் அருகே உள்ள வயலாமூரை சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகன் சபேசன்(வயது 34), கொத்தனார். இவரது மனைவி தீபிகா(24). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான புதிதில் இருந்தே தீபிகாவின் நடத்தையில் சபேசனுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அடிக்கடி தீபிகாவுடன் தகராறு செய்து வந்தார். அதனால் தீபிகா கோபித்துக்கொண்டு சிதம்பரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதன்பிறகு இவர்கள் குடும்ப விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. அவர்கள் இருவரையும் புதுச்சத்திரம் போலீசார் அழைத்து பேசி சமாதானப்படுத்தி சபேசனுடன் தீபிகாவை அனுப்பி வைத்தனர். தீபிகாவுடன் அவரது பெற்றோரும் வயலாமூருக்கு சென்றிருந்தனர்.

ஆனால் அடுத்த 2 நாட்களில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சபேசன் மனை பலகையை எடுத்து தீபிகாவின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் தீபிகா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக செத்தார். பின்னர் சபேசன் புதுச்சத்திரம் போலீசில் சரண் அடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் மோகன் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சபேசன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஆயுள்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு அளித்தார்.

தீபிகாவின் குழந்தையை பராமரிப்பதற்காக தீபிகாவின் தாயார் தனலட்சுமியிடம் அபராத தொகை ரூ.50 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறினால் சபேசன் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story