அரசு உதவித்தொகைக்கு பரிந்துரை செய்ய ரூ.300 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை


அரசு உதவித்தொகைக்கு பரிந்துரை செய்ய ரூ.300 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 21 Aug 2018 11:15 PM GMT (Updated: 21 Aug 2018 8:17 PM GMT)

ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆத்துக்கடை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது40). இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இரு பெண் குழந்தைகள் பிறந்தால் அரசின் நிதி உதவி கிடைக்கும் திட்டத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உமாசங்கர் விண்ணப்பித்துள்ளார்.

கால தாமதம் ஆனதால், அரசு விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி (51) என்பவரை அணுகி அரசின் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ்வரி விண்ணப்பத்தினை விருதுநகரில் உள்ள மாவட்ட அதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டார்.

அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத உமாசங்கர், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் முறையிட்டார். அவர்களின் ஆலோசனையின் பேரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த ராஜேஸ்வரியிடம், உமாசங்கர் லஞ்சப் பணம் ரூ.300 கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சம்பத்குமார் விசாரித்து, ராஜேஸ்வரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story