மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ


மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை,

மதுரை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் இறப்பவர்களின் உடல்கள் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு, மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இறந்தவரின் அடையாளம் தெரியாவிட்டால் அவரது உடல் 3 நாட்கள் வரை பெரிய ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்படும்.

இந்த 3 நாட்களுக்குள் உறவினர்கள் யாரும் வரவில்லை என்றால் போலீஸ் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தகனம் செய்யப்படும். இதற்கான செலவுகளை போலீசாரே செய்கின்றனர். அடையாளம் தெரியாத நபர்களை மருத்துவ முறைப்படி அடையாளம் காண பிரேத பரிசோதனையில் சில பாகங்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இதனை செய்ய பிணவறையில் உள்ள டாக்டர்களில் சிலர் ரெயில்வே போலீசாரிடம் லஞ்சமாக பணம் அல்லது ரெயிலில் டிக்கெட் எடுத்து தரச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் பேசிக்கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேத பரிசோதனை செய்வதற்கு, பட்டாசுகளை லஞ்சமாக கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்போதைய டீன் மருதுபாண்டியன், விசாரணை நடத்தி 2 பேரை இடைநீக்கம் செய்தார். இந்தநிலையில் மீண்டும் இதுபோன்று லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story