வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தை அடித்து கொலை; மகன் கைது


வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தை அடித்து கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 10 Jan 2019 4:45 AM IST (Updated: 10 Jan 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகம் ராசாம்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பரதேசி என்ற சுப்பிரமணி (வயது 55). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி திருப்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கலையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் இவருடைய இளைய மகன் பாலமுருகன் (25) வேலைக்கு செல்லாமல் இருந்தார். சுப்பிரமணி, மகனிடம் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நன்றாக நடத்தமுடியும், ஆதலால் வேலைக்கு செல்லுமாறு அடிக்கடி அறிவுரை கூறி வந்தார்.

நேற்று காலையிலும் பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதையடுத்து சுப்பிரமணி, ஏன் வேலைக்குச் செல்லவில்லை என்று மகனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் வீட்டிற்கு அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து தந்தையின் தலையில் தாக்கினார்.

இதில் மண்டை உடைந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியது. இதனையடுத்து அவர் மயங்கி விழுந்து சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டு மகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தந்தையை அடித்து கொன்ற பாலமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story