போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார்: சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு கொலை வழக்காக பதிவு செய்யவும் ஐகோர்ட்டு ஆணை


போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார்: சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு கொலை வழக்காக பதிவு செய்யவும் ஐகோர்ட்டு ஆணை
x
தினத்தந்தி 8 March 2019 11:21 PM GMT (Updated: 8 March 2019 11:21 PM GMT)

போலீசார் தாக்கியதில் சிறுவன் இறந்ததாக பெற்றோர் வழக்கு தொடுத்துள்ள நிலையில் சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த ஜெயா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் முத்துகார்த்திக்கை (வயது 17) எஸ்.எஸ்.காலனி போலீசார் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்று, பின்னர் விடுவித்தனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி 14-ந்தேதி என்னையும், எனது கனவரையும் போலீசார் அழைத்து, உங்கள் மகன் தான் திருடி உள்ளான் என்று தெரிவித்தனர்.

பின்னர் எனது மகனின் அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டனர். அன்று மாலையில் எனது மகனுக்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி, ஜனவரி 18-ந்தேதி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

பின்னர் எனது மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பல காயங்களை எனது மகன் காண்பித்தான். மேலும் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜனவரி 24-ந்தேதி இறந்துவிட்டான்.

பின்னர், எனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் போலீசார் எங்களிடம் கொடுத்து விட்டனர். நாங்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அதற்கு போலீசார் எங்களை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, எனது மகனின் உடலை அடக்கம் செய்யும் வரையில் போலீசார் எங்களுடன் இருந்தனர்.

போலீஸ் காவலில் வைத்து எனது மகனை தாக்கியதால்தான் அவன் இறந்துபோனான். ஆகையால் இதற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மகன் இறப்புக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், வட்டாட்சியர் முன்னிலையில் சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் உடன் இருக்க வேண்டும். இதை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் சிறுவனை ஆஜர்படுத்தியபோது உடலில் காயங்கள் இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி வழக்கினை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story