பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 10:41 PM GMT)

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரை மற்றும் நாகமலைபுதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200–க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதேபோல் மதுரை கல்லூரியில் 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், அகில இந்திய மகளிர் கலாசார சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வால்டேர், அகில இந்திய மகளிர் கலாசார சங்க மாநில தலைவர் கில்டாமேரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் கலந்து கொண்டவர்கள், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story