ரவுடியை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது 9 பேருக்கு வலைவீச்சு


ரவுடியை கொலை செய்ய திட்டம்: ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது 9 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 March 2019 4:15 AM IST (Updated: 21 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டையில் ரவுடியை கொலை செய்வதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டையில் உள்ள சத்யா சிறப்பு பள்ளியின் பின்புறத்தில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய வந்தது. உடனே லாஸ்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையில் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டவுடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். போலீசார் அவர்களை துரத்திச்சென்று 3 பேரை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், கடந்த 2016–ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மடுவுப்பேட்டை சேர்ந்த முரளி கூட்டாளியான லாஸ்பேட்டை நெருப்புக்குழி டாக்டர் ராமதாஸ் தெருவை சேர்ந்த ரவுடி சேகர் (வயது30), மடுவுப்பேட் மாரியம்மன் கோவில் தெரு வெங்கடேஷ் (24), மேற்கு சாரம் ஜெயராமன் நகர் கவுதமன் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 வீச்சரிவாள்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முரளியை கொலைக்கு பழிக்குப்பழியாக பிரபல ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும், வழக்கு செலவுக்காக வழிப்பறியில் ஈடுபடவும் லாஸ்பேட்டையில் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவுடி சேகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் தப்பி ஓடிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story