வேலூரில் கார்களில் கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்


வேலூரில் கார்களில் கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 11:15 PM GMT)

வேலூரில் கார்களில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ரூபிபாய் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை 8 மணி அளவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி அவர்கள் சோதனையிட்டனர்.அதில் ரூ.1 லட்சம் இருந்தது. பணம் கொண்டு வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அவர் காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த ஜான்கிறிஸ்டோ (வயது 50) என்பதும், தொழில் நிமித்தமாக சென்னைக்கு பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து வேலூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த மற்றொரு காரை மடக்கினர். அதில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த கோவிந்தன் (60) என்பவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மின்மோட்டார் வாங்க பணம் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

ஆனால் அவர் வைத்திருந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வேலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story