உடுமலை அருகே வாகன சோதனை: ரூ.93¾ லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் சிக்கின தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி


உடுமலை அருகே வாகன சோதனை: ரூ.93¾ லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் சிக்கின தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 24 March 2019 4:15 AM IST (Updated: 24 March 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில் ரூ.93¾ லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் சிக்கின.

உடுமலை,

தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களிடம் பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் அந்தியூர் பகுதியில் வேளாண்மை அலுவலர் சத்தியா தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் அசோக்குமார், போலீசார் கோபால், பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் அதிரடியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது உடுமலையில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு பாதுகாப்பு வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது வேனில் இருந்த 4 ஆபரண பெட்டிகளை திறந்து காண்பிக்குமாறு அதிகாரிகள் கூறினர். அதன்படி வேனில் வந்தவர்கள் அந்த பெட்டிகளை திறந்து காண்பித்தனர். அதில் 2 ஆபரண பெட்டிகளில் தங்க நகைகளும், 2 ஆபரண பெட்டிகளில் வெள்ளி நகைகளும் இருந்தன.

தங்கம், வெள்ளி நகைகள் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள் தற்போது ஆவணங்கள் கைவசம் இல்லை என்று பதில் அளித்து உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில், அந்த நகைகள் அனைத்தும் கோவையை சேர்ந்த பிரபல நகைக்கடைக்கு சொந்தமானதாகும். கோவையில் இருந்து வேனில் பொள்ளாச்சிக்கு வந்து அங்குள்ள நகைக்கடையில் 2 ஆபரண பெட்டிகளில் நகைகளை வாங்கியதாகவும், அதன்பிறகு உடுமலைக்கு வந்து இங்குள்ள நகைக்கடையில் இருந்து 2 ஆபரண பெட்டிகளில் நகைகளை பெற்று கொண்டு கோவைக்கு சென்ற போது பறக்கும் படையினரிடம் சிக்கி கொண்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில், தங்க நகைகளின் மதிப்பு ரூ.92 லட்சத்து 22 ஆயிரம் என்பதும், வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் என்பதும் தெரிய வந்தது. மொத்த மதிப்பு ரூ.93 லட்சத்து 81 ஆயிரம் ஆகும். இந்த நகைகளை கோவையில் உள்ள ஒரு நகை தயாரிக்கும் கம்பெனிக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக பறக்கும் படையினர் கோவை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அந்த பாதுகாப்பு வேன் உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வேனில் பயணம் செய்தவர்கள் இது குறித்து தங்கள் பணியாற்றும் நகைக்கடைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பறக்கும் படையினரிடம் சிக்கிய நகைகளை மீட்பதற்கான ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் வருமானவரித்துறையினருக்கும், பறக்கும் படையினருக்கும் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து உடுமலைக்கு விரைந்து வந்த வருமான வரித்துறையினர், நகைக்கடை உரிமையாளர்கள் கொடுத்த ஆவணத்துடன், வேனில் சிக்கிய நகைகளை ஒப்பிட்டு பார்த்தனர். அனைத்து நகைகளுக்கும் ஆவணங்கள் இருந்ததால் பிடிபட்ட தங்கம், வெள்ளி நகைகளை ஒப்படைத்தனர். அதன்பிறகு தங்கம், வெள்ளி நகைகளுடன் பாதுகாப்பு வாகனம் அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றது.


Next Story