திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் கடைசி நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்


திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் கடைசி நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 March 2019 11:53 PM GMT (Updated: 26 March 2019 11:53 PM GMT)

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட கடைசி நாளான நேற்று 27 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு அ.ம.மு.க. சார்பில் வேட்பாளராக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அ.ஞானசேகரன் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவருடன் அ.ம.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் ரா.அருள், சுயேச்சையாக ப.அண்ணாதுரை, பு.கருணா, மு.அன்பழகன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அ.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஐயப்பன், அ.விக்னேஷ்வரன், ஏ.விஜயன், தி.சிவகுருராஜ், எஸ்.அண்ணாதுரை, அ.செந்தில்முருகன், சா.அண்ணாதுரை, பு.இந்திரமோகன், அ.கலைமணி என மொத்தம் 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் ஆரணியில் உதவி தேர்தல் அலுவலரான இல.மைதிலியிடம் நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் கடைசியாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

அப்போது கட்சியின் அமைப்பு செயலாளர் போளூர் சி.ஏழுமலை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பையூர் எ.சந்தானம், மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன், மாவட்ட துணை செயலாளர் அன்னபூரணிவிஜய் ஆகியோர் இருந்தனர்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் வ.ஷாஜி, நாம் தமிழர் கட்சி சார்பில் அ.தமிழரசி, செ.சந்திரலேகா, தமிழ்நாடு இளைஞர் கட்சி கா.சக்திவேல், சுயேச்சைகள் எம்.ஜி.ஷேக்அகமத், சி.ராம்மூர்த்தி, க.ஏழுமலை, எஸ்.ஏழுமலை, மா.பெருமாள், எம்.கிரி ஆகியோர் மனுதாக்கல் செயதனர். ஆரணி தொகுதிக்கு மட்டும் நேற்று 11 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.


Next Story