கட்சியை அடமானம் வைத்து விட்டார்: சுயநலத்துக்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார் வைகோ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
சுயநலத்துக்காக கட்சியை அடமானம் வைத்து விட்டு, தி.மு.க.வுடன் வைகோ கூட்டணி வைத்துள்ளார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
காங்கேயம்,
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு என்று சொன்னால் ஜெயலலிதாவின் கோட்டை என்பது எல்லோருக்கும் தெரியும். மத்தியில் நமது கூட்டணி கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர் அணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே பிரதம வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்துள்ளார். ராசியான தலைவர். இவர் அறிவித்த நேரத்தில் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் கூட, தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை அறிவிப்போம் என்கிறார்.
இந்தியா முழுவதும் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சியினரும் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி என்று கூறி வாக்கு கேட்டு வருகிறார்கள். எதிரணியில் இருப்பவர்கள் தலையில்லாத முண்டம் போல் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். கொள்கை இல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைந்துள்ளன. கொள்கை அடிப்படையிலான கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூட்டணி அமைந்து இருக்கிறோம். கூட்டணியில் உள்ளவர் ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது நாம் கேட்கும் திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். தேவையான நிதி மத்தியில் இருந்து பெற்று தமிழகம் செழிக்கும். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு கேட்கின்றன. கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டை எதிர்த்து காங்கிரஸ் நிற்கிறது. இவர்கள் எப்படி ஒற்றுமையாக இருந்து பிரதமரை தேர்வு செய்வார்கள். மாநிலங்களுக்குள்ளேயே ஒற்றுமை கிடையாது. ஒற்றுமையில்லாதவர்கள் ஒன்றாக இணைந்து இந்த நாட்டுக்கு எப்படி நல்லது செய்வார்கள். எப்படி நிலையான ஆட்சியை தருவார்கள்.
மு.க.ஸ்டாலின் 8 வழிச்சாலை பற்றி பேசி வருகிறார். 8 வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசு திட்டமல்ல. மத்திய அரசு திட்டம். மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மூலமாக அந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் 8 வழிச்சாலை திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, நான் பதில் சொன்னேன். 2018–ம் ஆண்டு ஜூன் 14–ந் தேதி சட்டமன்றத்தில் நான் பேசும்போது, 8 வழிச்சாலையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதனால் தமிழகம் வளர்ச்சி பெறும். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால், கோவை, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் உதிரி பாகங்களை தயாரிப்பு கூடங்கள் அறிவிக்கப்பட்டு கொண்டு வரப்பட உள்ளது. அந்த திட்டங்கள் வரும்போது சாலைவசதிகள் வேண்டும். தற்போதைய சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்பட்டு விலைமதிக்க முடியாத உயிர்போகிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, நாமக்கல் இந்த பகுதிகள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாநில அரசு நிலத்தை மட்டும் கையகப்படுத்திக்கொடுக்கிறது. நிலம் கையகப்படுத்துவதற்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் 8 வழிச்சாலை திட்டம் குறித்து பேச வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
நான் இப்போது கூறுகிறேன். வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் சட்டமன்றத்தில் பதில் சொன்னபோது, அப்பகுதியில் உள்ள விவசாயிகளை அழைத்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அதைத்தான் மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். தேவையான மார்க்கெட் நிலவரப்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது 800 ஹெக்டேர் நிலம் நமது பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்டது. அப்போது மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்தவர். அப்போது 800 ஹெக்டேர் விவசாய நிலத்தை கையகப்படுத்தினீர்களே. அப்போது விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. அந்த நிலத்துக்கு போதிய இழப்பீடு தொகை வழங்கவில்லை. வீடுகள் இருந்தால் கூட, குறிப்பிட்ட தொகையை கொடுத்தார்கள்.
இப்போது அப்படியல்ல. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிலத்தின் ‘கைடுலைன்’ விலையை உயர்த்தி உள்ளோம். விவசாய நிலங்களுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தின்படி ஒன்றுக்கு 3 மடங்கு விலையை உயர்த்திக்கொடுக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் ஒரு மடங்கு அதிகமாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. அரசு, நிலத்தை கையகப்படுத்தும்போது அந்த நில உரிமையாளருக்கு 3 மடங்கு நில இழப்பு தொகை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் மாமரம் இருந்தால் அதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும். தென்னை மரம் இருந்தால் அதற்கு தகுந்த இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரு மரத்துக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு 70 தென்னை மரங்கள் என்றால் ரூ.28 லட்சம் இழப்பீடு தொகையாக மத்திய அரசு அறிவித்தது. நில மதிப்பையும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு ரூ.48 லட்சம் கிடைக்கும்.
ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசிய குறிப்பு இருக்கிறது. அவர் பேசும்போது, நான் 8 வழிச்சாலை திட்டத்தை தடுக்கவில்லை. அதே நேரத்தில் விவசாயிகளை அழைத்து பேசி திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைத்தான் மத்திய தரைவழிப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியும் கூறியிருக்கிறார். இப்போது மு.க.ஸ்டாலின், ரூ.10 ஆயிரம் கோடியில் சாலை போடுகிறார்கள். இதில் ரூ.4 ஆயிரம் கோடி எனக்கு கமிஷன் கிடைக்கும் என்கிறார். இது பச்சைப்பொய். இது மத்திய அரசின் திட்டம். உலக அளவில் யார் வேண்டும் என்றாலும் இந்த திட்டத்துக்கு டெண்டர் போடலாம். டெண்டர் பிரிக்கும்போது தான் யார் என்று தெரியும். மு.க.ஸ்டாலின் காலத்தில் டெண்டர் பெட்டியில் போட்டார்கள். அப்போது வேண்டும் என்றால் கமிஷன் கிடைத்திருக்கும். கமிஷன் வாங்கி, வாங்கி அந்த ஞாபகத்தில் பேசுகிறார். வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று இப்படி மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்து வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார். இவர் அறிவித்த பிரதம வேட்பாளர் கர்நாடகத்தில் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சி மத்தியில் ஏற்பட்டதும், ராகுல் காந்தி பிரதமர் ஆனதும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும். காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று பேசியிருக்கிறார். இதற்கு என்ன பதில் மு.க.ஸ்டாலின்.
காவிரி நீரின் உரிமையை பெறுவதற்கு விவசாயிகள் போராடிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு அந்த உரிமையை உச்சநீதிமன்றத்தில் மூலமாக ஜெயலலிதா விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு இரண்டையும் ஏற்படுத்திக்கொடுத்து கூட்டம் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசுக்கு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை வழங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் ராகுல்காந்தி கூறுவது போல் மேகதாதுவில் காவிரியை தடுத்து அணை கட்டும்போது 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். இதனால் தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காது. 20 மாவட்ட மக்கள் காவிரி நீரை நம்பி இருக்கிறார்கள். டெல்டா பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வறட்சி பகுதியாக மாறும்.
மு.க.ஸ்டாலின் முன்மொழித்த பிரதம வேட்பாளர் ராகுல் காந்தி தமிழகத்தை பாலைவனமாக்குவதற்காக அந்த கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப்போட வேண்டுமா? இதுவரை கம்யூனிஸ்டு கட்சிகள் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. மவுனமாக இருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான விரோத செயல். அநீதி இழைக்க நினைக்கிறார்கள். நாம் போராடி பெற்ற தீர்ப்பை அலட்சியப்படுத்துவதாக இந்த கருத்து அமைந்துள்ளது. நான் ஒரு விவசாயி என்ற முறையில் இதை பேசுகிறேன். விவசாயத்துக்கு தண்ணீர் தேவை. விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை கொடுப்பது எனது முதல் கடமை. நாம் போராடி பெற்ற தீர்ப்புக்கு அநீதி, குந்தகம் விளைவிக்கும் வகையில் ராகுல் காந்தி கர்நாடகத்தில் பேசியிருக்கிறார் என்றால் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர். சூடு, சுரணை, வெட்கம் இருந்தால், தமிழக மண்ணில் பிறந்து இருந்தால், விவசாயிகளை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தை பாலைவனமாக்க பார்க்கிறீர்களா?. ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்து இருக்கிறது. நமக்கு கிடைத்த நீதியை அவர்கள் ஒடுக்கப்பார்க்கிறார்கள். நமது நீதி வெற்றி பெற, நமது உழைப்பு மேலும் செழித்தோங்க நமது வெற்றி வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.
சேலம் அருகே 900 ஏக்கரில் ரூ.900 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு நாட்டு பசு, கலப்பின பசுக்கள், கால்நடை வளர்ப்பு மேம்படுத்தப்பட உள்ளது. காங்கேயம் என்றால் காளை என்ற பெருமை பெற்றது. காங்கேயம் சிறப்பை போற்றும் வகையில் பிரமாண்டமாக காங்கேயம் காளை சின்னம் இந்த பகுதியில் அமைக்கப்படும். நானே வந்து தொடங்கி வைப்பேன். கோதாவரி–காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை உருவாக்குவோம். வறண்ட ஏரிகள், குளங்களில் நீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். உபரி நீரை நீரேற்று நிலையங்கள் உதவியுடன் குளங்களில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்படும். குழாய் மூலமாக இந்த திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றிக்கொடுக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கூறியிருக்கிறார்.
விவசாயி முதல்–அமைச்சராக இருக்கக்கூடாதா?. மு.க.ஸ்டாலின் என்னை விவசாயி அல்ல விஷவாயு என்றார். விவசாயியை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம். இரவு,பகல் பாராமல், மழை, வெயிலை பாராமல் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைப்பவர்கள் விவசாயி. நகரப்பகுதியில் வாழ்ந்தவர் மு.க.ஸ்டாலின். நான் கிராமப்பகுதியில் பிறந்து வாழ்ந்து இன்று முதல்–அமைச்சராகி இருக்கிறேன். உழைப்பின் அருமை நமக்குத்தான் தெரியும். உழைப்பின் அருமை தெரியாமல் விவசாயிகளை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்த வேண்டாம். விசைத்தறிக்கும், நெசவாளர்களுக்கும் விலையில்லா மின்சாரம் மட்டுமல்ல, தடையில்லா மின்சாரம் கொடுப்பதும் நமது அரசு தான். 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு விலையில்லாமல் இந்தியாவில் தமிழகத்தில் தான் கொடுக்கப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் வைகோ உள்ளார். அவர் எப்படியெல்லாம் தி.மு.க.வை விமர்சனம் செய்தார். திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இது நன்கு தெரியும். வைகோவை போல் தி.மு.க.வை விமர்சனம் செய்த தலைவர்களே இல்லை. ஒரு கவுன்சிலராக கூட வாய்ப்பற்றவர் மு.க.ஸ்டாலின் என்றார் வைகோ. இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர் கருணாநிதி என்றார். மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டு டெல்டா மக்களின் துரோகி மு.க.ஸ்டாலின் என்றார். 2016–ம் ஆண்டு தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியை ஊழல் செய்து மோசடி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்றார். அதே வைகோ பிரதம வேட்பாளர் ராகுல் காந்தி என்று இப்போது பேசுகிறார். ஈழத்தமிழர்கள் பற்றி பேசிய வைகோ இப்போது ஏன் அமைதியாகிவிட்டார் என்று தெரியவில்லை.
ம.தி.மு.க. வை வைகோ தொடங்கினார். அதற்கு சின்னம் இருக்கிறது. இப்போது ம.தி.மு.க. வேட்பாளர் எந்த சின்னத்தில் நிற்கிறார். ஒரு கட்சியில் உள்ளவர்கள் அவர்களுக்கான சின்னத்தில் போட்டியிடுவார்கள். அடுத்த கட்சி சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் அந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். தி.மு.க. சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் தி.மு.க.வில் உறுப்பினராக இருக்க வேண்டும். ம.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க. வேட்பாளராக ஈரோட்டில் நிற்கிறார் என்றால் வைகோ இதை தெளிவுபடுத்த வேண்டும்.
ம.தி.மு.க. வேட்பாளர் என்று வைகோ பேசிக்கொண்டிருக்கிறார். சட்டரீதியாக பார்க்கும்போது ஒரு சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் அந்த சின்னத்தின் கட்சியில் உறுப்பினராக இருந்தால் தான் நிற்க முடியும். தேர்தல் விதிமுறை அப்படி உள்ளது. வைகோவின் பேச்சு நன்றாக இருந்தாலும் செயலில் ஒன்றும் இல்லை. கட்சியை கொண்டு போய் அடமானம் வைத்து விட்டார். எத்தனை பேர் அந்த கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்தார்கள். சுயநலத்தின் அடிப்படையில் இன்று தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததுடன், ம.தி.மு.க. என்ற கட்சியை வைத்துக்கொண்டு தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள் என்றால் இதைவிட அவமானம் என்ன வேண்டும். தி.மு.க. சின்னத்தில் நிற்பவரை ம.தி.மு.க. வேட்பாளர் என்று சொன்னால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பது அவர்களுக்கே தெரியும்.
தொண்டர்களை புண்படுத்திய வைகோவுக்கு காலம் பதில் சொல்லும். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அவர்களின் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நூறாயிரம் மு.க.ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. ஆட்ட முடியாது. ஆனைமலையாறு–நல்லாறு திட்டம் நிறைவேற்ற பரிசீலிக்கப்படும். ஈரோடு–பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதையுடன் சாலை அமைக்க கேட்டு இருக்கிறார்கள். அந்த திட்டம் பரிசீலிக்கப்படும். கைத்தறி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு கேட்டு இருக்கிறார்கள். அது பரிசீலிக்கப்படும். வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை ஓடை அணைக்கு புதிய நீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். அது பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.