வேளாங்கண்ணி அருகே பாரதீய ஜனதா பிரமுகரை கொலை செய்த 2 பேர் கைது


வேளாங்கண்ணி அருகே பாரதீய ஜனதா பிரமுகரை கொலை செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 7:22 PM GMT)

வேளாங்கண்ணி அருகே மனைவியிடம் தவறாக நடந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பாரதீய ஜனதா பிரமுகரை கொலை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). இவர், பாரதீய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவராக இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை திருப்பூண்டி அருகே உள்ள கீரைநேரி ஏரி கரையில் செந்தில்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமார் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் திருப்பூண்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இதயத்துல்லா(41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் மனைவியிடம் இதயத்துல்லா தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், இதயத்துல்லாவிடம் தகராறு செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் இதயத்துல்லா தனது நண்பரான கீழ்வேளூர் தாலுகா பொரவச்சேரி கீழத்தெரு சேர்ந்த பரமேஸ்வரன்(41) என்பவரை அழைத்து வந்து செந்தில்குமாருடன் காரில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி மதுகுடித்து உள்ளனர். இந்த சந்தர்ப்பந்தை பயன்படுத்தி 2 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கீரைநேரி ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கீழையூர் போலீசார் இதயத்துல்லா, பரமேஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story