ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் திருட்டு: 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய வடமாநில கொள்ளையன்


ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் திருட்டு: 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய வடமாநில கொள்ளையன்
x
தினத்தந்தி 26 May 2019 11:13 PM GMT (Updated: 26 May 2019 11:13 PM GMT)

திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் ஏலக்காய் மூட்டைகளை திருடிய வழக்கில் தேடப்பட்ட வடமாநில கொள்ளையன் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினான்.

திண்டுக்கல்,

தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வடமாநிலங்களுக்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக ஏலக்காய் மூட்டைகள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இங்கு இருந்து ரெயில்கள் மூலம் ஏலக்காய் மூட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன்படி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல்லில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயிலில் ஏலக்காய் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன.

அப்போது ஓடும் ரெயிலில் இருந்து 2 ஏலக்காய் மூட்டைகள் திருடு போனது. அதன் மதிப்பு ரூ.2¾ லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 9 பேர் ஏலக்காய் மூட்டைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து வாரணாசி மொகல்ஸ்ராய் பகுதியை சேர்ந்த நவுசாத், பிண்டு, அசோக்சவுகான் உள்பட 8 பேரை கைது செய்தனர். ஆனால், முக்கியமான கொள்ளையன் முகமதுஆசிப் (வயது 44) தலைமறைவாகி விட்டான். ரெயில்வே பாதுகாப்பு படையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முகமதுஆசிப்பை கைது செய்ய முடியவில்லை. இதனால் முகமதுஆசிப் மீதான வழக்கை தனியாக பிரித்து திண்டுக்கல் கோர்ட்டில் விசாரணை நடந்தது. அதில் கைதான 8 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே 8 ஆண்டுகளாக சிக்காத முகமதுஆசிப் நடவடிக்கைகளை, திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமதுஆசிப் சொந்த ஊருக்கு வந்து செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையிலான தனிப்படையினர் வாரணாசிக்கு விரைந்தனர்.

அங்கு பல நாட்களாக முகாமிட்டு முகமதுஆசிப்பை தேடினர். ஆனால், மற்றொரு கொள்ளை வழக்கில் வாரணாசி போலீசாரிடம், முகமதுஆசிப் சிக்கினான். இதனால் அவன் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டான். இதையடுத்து திண்டுக்கல்லில் ஏலக்காய் மூட்டைகளை திருடிய வழக்கில் முகமதுஆசிப்பை கைது செய்வதற்கு கோர்ட்டு உத்தரவை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பெற்றனர்.

இதன்மூலம் ஒருசில நாட்களில் முகமதுஆசிப்பை கைது செய்து, திண்டுக்கல்லுக்கு கொண்டு வர உள்ளனர். அப்போது காவலில் எடுத்து விசாரிக்கவும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story