கர்நாடக மழை பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சித்தராமையா வலியுறுத்தல்


கர்நாடக மழை பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2019 11:45 PM GMT (Updated: 11 Aug 2019 11:45 PM GMT)

கர்நாடக மழை பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மழை வெள்ளம் காரணமாக அரசு தனியார் சொத்துகள் ரூ.1 லட்சம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 25-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி அதிகளவில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளன. மாநிலத்தின் 50 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய மோசமான வெள்ளம், முன்பு எப்போதும் ஏற்பட்டது இல்லை. சாலைகள், பாலங்கள், ரெயில்வே தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும். வெள்ள பாதிப்புகளை கண்டு மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துள்ளது.

மத்திய அரசு உடனடியாக, இந்த மழை பாதிப்பை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும். பிரதமர் உடனே கர்நாடகத்திற்கு வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதவே போதாது. நிவாரணம் கொடுங்கள், நிவாரணம் கொடுங்கள் என்று கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை. மத்திய அரசு நமக்கு தானமாக கொடுப்பது இல்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மத்திய அரசு ஒதுக்கியுள்ளது நிதி ஒன்றும் இல்லை.

கர்நாடக விஷயத்தில் அதுவும் இதுபோன்ற மோசமான சூழ்நிலையில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது சரியல்ல. இதை யாரும் சரி என்று சொல்ல மாட்டார்கள். கர்நாடக மக்கள் என்ன அநியாயம் செய்தனர்?. பா.ஜனதாவை சேர்ந்த 25 பேரை எம்.பி.க்களாக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பியது, மக்களின் தவறா?.

இதற்கு முன்பு மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங், நேரில் வந்து ஆய்வு நடத்தி நிவாரண பணிகளுக்கு ரூ.1,600 கோடி நிதியை அறிவித்தார். இதற்கு முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஹாவேரியில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இப்போது சில நாட்களுக்கு முன்பு கதக்கில் எடியூரப்பா வெள்ள பாதிப்புகளை பார்வையிடும்போது, கஷ்டங்களை கூறிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக எடியூரப்பா மன்னிப்பு கேட்க வேண்டும். மந்திரிகள் இல்லாததால் நிவாரண பணிகள் சரிவர நடக்கவில்லை. அதனால் எடியூரப்பா உடனே, மந்திரிசபையை விரிவாக்கம் செய்து, புதிய மந்திரிகளை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஒதுக்கி, நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் நிவாரண பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

மந்திரிகள் இல்லாததால் நிவாரண பணிகள் சரியாக நடைபெறவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாத்து, அவற்றுக்கு தேவையான தீவனத்தை வழங்க வேண்டும். வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். மீட்பு பணிகளுக்கு இன்னும் கூடுதலாக ராணுவ வீரர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு இப்போதாவது மாற்றாந்தாய் மனப்பான்மையை கைவிட்டு, மாநில அரசின் கோரிக்கைகளை ஏற்று உதவிகளை செய்ய முன்வர வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எங்கள் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story