திருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்; திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என பெண்கள் அறிவிப்பு


திருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்; திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என பெண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2019 5:00 AM IST (Updated: 15 Sept 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம் என பெண்கள் அறிவித்தனர்.

திருப்பூர்,

மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் கடந்த 12-ந்தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பெருமாம்பாளையத்தை சேர்ந்த பெண்கள், அக்கம், பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் மங்கலம் போலீசார் மற்றும் டாஸ்மாக் மண்டல அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் மண்டல அதிகாரியிடம் பெருமாம்பாளையம் குடியிருப்புக்கு மிக அருகே டாஸ்மாக் கடை உள்ளது. மேலும் பெருமாம்பாளையம் பகுதியில் இருந்து மலைக்கோவில் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் மண்டல அதிகாரி,டாஸ்மாக் கடை மூடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுக்கடை செயல்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் மது குடிக்க வந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்றும் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் நேற்று மதியம் 3 மணிக்கு சாமளாபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் 30 பேர் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் வேண்டும், வேண்டும் அரசு மதுபானக் கடை வேண்டும் "என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மதுப்பிரியர்கள் போலீசாரிடம் கூறுகையில் "மது வாங்குவதற்கு பஸ் மூலமாக நீண்ட தூரம் சென்று மது வாங்கி வருகிறோம், ஆகவே எங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என கூறினர். அதனைத் தொடர்ந்து போலீசார் மதுப்பிரியர்களிடம்" சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று மனு கொடுங்கள் "என கூறினர். பின்னர் மதுப்பிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பெருமாம்பாளையம் பெண்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஒரு சிலர் பெருமாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்களை ஆட்டோ மூலம் வரவழைத்து டாஸ்மாக் கடை முன்பு மதுக்கடை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறந்தால் நாங்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

Next Story