புதிய விடியல் பிறக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் - விக்கிரவாண்டியில் சீமான் பேச்சு


புதிய விடியல் பிறக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் - விக்கிரவாண்டியில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 6 Oct 2019 12:15 AM GMT (Updated: 5 Oct 2019 6:55 PM GMT)

புதிய விடியல் பிறக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்று விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து, கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1¼ கோடி மக்கள் உள்ள சிங்களர்கள் தனி நாடு, தனி ராணுவம் வைத்து வாழ்கின்றனர். ஆனால் 13 கோடி பேர் உள்ள தமிழர்களுக்கு தனியாக ஒரு தேசம் கூட இல்லை. அறிவை உலகிற்கு கடன் கொடுத்த மக்கள், இன்று அறியாமையில் மூழ்கி கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு ஒரு தலைவனாக பிரபாகரன் வந்தார். அடிமையாய் வாழ்வதை விட உரிமையாய் சாவது மேலானது. அதை காட்டிலும் சுதந்திரமாக போராடி வாழ்வது மேலானது என்று கற்பித்தார்.

பா.ஜனதாவின் கிளை கழகங்களாக தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றனர். எங்களுக்கு எந்த உரிமைகளும் இல்லை, அனைத்தும் பறிபோய் விட்டது. 90 சதவீத தமிழர்கள் அழிந்து போய்விட்டனர். தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்று கூறி நீட் தேர்வை அறிமுகப்படுத்தினர். ஆனால் இன்று ஆள்மாறாட்டம் உள்பட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு போலி மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் மணிரத்தினம் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கு ஆகும்.

தேர்தல் பணிக்காக கூட்டணி கட்சிகளுக்கு நிதி வழங்கிய தி.மு.க.வுக்கு, அந்த தொகை எங்கிருந்து வந்தது. இவர்களது தேர்தல் செலவுகளில் தங்களது சொந்த தொலைக்காட்சிகளுக்கே விளம்பரம் செய்தவகையில், செலவு செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள். நூறுநாள் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழித்து விட்டனர். இந்தியை தமிழில் எழுதி படிக்க சொல்கிறார்கள். நமக்கு அதை படிக்கும் போது அதன் பொருள் தெரியாது. ஆனால் எதற்காக இந்த முறையில் இந்தியை படிக்க கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ் தான் பேச வேண்டும், எனவே இந்தியை கொண்டு வரக்கூடாது.

எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் அதன் கதவை சின்ன ஒரு திறவுகோலால் தான் திறக்க முடியும். அதேபோல் இந்த அமைப்பில் இருந்து ஒருவரை நீங்கள் வெற்றி பெற செய்தாலும், நமக்கான புதிய விடியல் பிறக்கும். அனைவருக்கும் இலவச கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பது தான் எங்களது கொள்கையாகும். இதை தான் எங்களது தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளோம். எனவே எங்களது வெற்றி வேட்பாளர் கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆகையால் அனைவரும் சுயமாக சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மண்டல செயலாளர் விக்ரம், பொறுப்பாளர் பூபாலன், மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், சாகுல்அமீது, அன்பு, நகர பொறுப்பாளர் பரசுராமன், வரதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story