கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மனைவி-கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை


கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மனைவி-கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 1 Nov 2019 3:45 AM IST (Updated: 1 Nov 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டியில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள்தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 35). இவருடைய மனைவி பிருந்தா (29). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கட்டிட தொழிலாளியான பிரகாசம் கோவையில் வேலை பார்த்து வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பிருந்தாவுக்கும் அதேபகுதியை சேர்ந்தவர் கபாலி என்கிற அழகரசன் (29) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த பிரகாசம் 2 பேரையும் கண்டித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிரகாசம், பிருந்தா ஆகியோர் வந்து உள்ளனர். அங்கு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியே வந்த பிரகாசத்தை அந்த பகுதியில் மறைந்திருந்த அழகரசன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பிரகாசம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதையடுத்து பிரகாசத்தின் உடலை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தின் அருகே வீசிவிட்டு அழகரசன் சென்றுவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பான விசாரணையில் அழகரசன், பிரகாசத்தை கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதற்கு உடந்தையாக பிருந்தா செயல்பட்டு இருப்பதும் உறுதியானது.

இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் உறுதியானதால் அழகரசன், பிருந்தா ஆகியோருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் நேற்று தீர்ப்பளித்தார். 

Next Story