விஜயபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


விஜயபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 6:01 PM GMT)

பெரம்பலூர் மாவட்டம் விஜயபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விஜயபுரம் திருவள்ளுவர் தெருவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனிநபர் கழிப்பறை அமைக்க குழி தோண்டியபோது, அப்பகுதியில் இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று கோரையாறு- தொண்டமாந்துறை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் செல்லும் பகுதியில் தனிநபர் கழிப்பறை குழி அமைக்கக்கூடாது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டமாந்துறை ஊராட்சி செயலாளர் கலியமூர்த்தி மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடனடியாக தனிநபர் கழிப்பறை குழி மூடப்படும். குடிநீர் குழாய் சீரமைத்து 2 நாட்களில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாக தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கோரையாறு- தொண்டமாந்துறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story