ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் தொப்பூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய குறுவனம் பொதுமக்கள் வரவேற்பு


ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் தொப்பூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய குறுவனம் பொதுமக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 2:27 AM GMT (Updated: 16 Sep 2020 2:27 AM GMT)

தொப்பூர் அருகே ஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரியவகை மரக்கன்றுகளை நட்டு குறு வனத்தை உருவாக்கியுள்ளனர். இது அப்பகுதியில் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தர்மபுரி,

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில், வேலை வாய்ப்புகளை இழந்து மீண்டும் சொந்த கிராமத்திற்கு வந்த இளைஞர்களும், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்களும் ஒன்று கூடி அரியவகை மரங்களை கொண்டு ஒரு வனப்பகுதியை உருவாக்க முடிவெடுத்தனர்.

அதற்காக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள செக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெளியூரில் பணியாற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் இல்லாத வன்னி, நீர்மருது, மகிலம், கடம்பம், கருங்காலி, ராம்சீதா, சரக்கொன்றை உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட மரகன்றுகளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வாங்கினர்.

சொட்டு நீர் பாசனம்

பின்னர் அதிக அளவில் பழங்கள், விதைகள் வரும் மரக்கன்றுகளையும் வாங்கி சுமார் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சுயசார்பு பொருளாதாரத்தை மையமாக கொண்டு சுய நிதியில் தங்கள் வீடுகளில் கடப்பாரை, மண் வெட்டி, போன்ற உபகரணங்களை கொண்டு தொப்பையாறு அணை பகுதியில் நிலத்தை சமன்செய்து மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மேலும் மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாதவண்ணம் தங்கள் வீடுகளில் இருந்து பழைய புடவைகளை கொண்டு வந்து தற்காலிக வேலிகள் அமைத்துள்ளனர்.

இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டி அமைத்து கொடுத்துள்ளது. மேலும் இந்த 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதனால் பின்வரும் காலங்களில் இந்த குறுவனத்திற்கு இடம் பெயரும் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவையினங்கள் தங்கள் கிராமத்திற்கு உணவு தேடி வரும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வரவேற்பு

இந்த கிராமத்தில் உள்ள பல தன்னார்வ குழுக்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு செல்லும் இளைஞர்கள் இதே போன்ற ஒரு மூலிகை வனத்தையும் பாறைகளால் காட்சியளித்த ஒரு மலையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை மழை காலத்திற்கு முன்பு நட்டு வைத்துள்ளனர். இந்த விதைகள் தற்போது வளரத்தொடங்கி உள்ளன. கொரோனா ஊடரங்கு காலத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறுவனத்தை ஏற்படுத்தி உள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story