நெல்லை, தென்காசியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை, தென்காசியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2020 11:44 PM GMT (Updated: 10 Nov 2020 11:44 PM GMT)

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி,

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டும். மேலும் இந்த இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் இந்த இட ஒதுக்கீட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நெல்லை மாவட்ட தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் விக்டர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இலஞ்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். ஆசிரியர் டொமினிக் ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணை பொதுச்செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வடகரை பள்ளி தலைமை ஆசிரியர் குலாம், ஆசிரியர்கள் கருப்பசாமி, பீர்முகமது ஆகியோர் பேசினார்கள். ஆசிரியர் அம்பலவாணன் நன்றி கூறினார்.

Next Story