விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் சதியிருந்தால், மத்திய அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தவேண்டும்; மத்திய மந்திரிக்கு, சஞ்சய் ராவத் பதிலடி


சஞ்சய் ராவத்
x
சஞ்சய் ராவத்
தினத்தந்தி 13 Dec 2020 9:51 PM GMT (Updated: 13 Dec 2020 9:51 PM GMT)

விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் சதியிருந்தால் மத்திய அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தவேண்டும் என மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வேவுக்கு, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய மந்திரி கருத்து
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியின் எல்லையில் கடந்த 2 வாரமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவின் சதித்திட்டம் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இவரின் கருத்துக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் மத்திய மந்திரி தன்வேக்கு பதிலளிக்கும் விதமாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கலந்துரையாட வேண்டும்
விவசாயிகள் போராட்டத்தின் பின்னால் பாகிஸ்தானும், சிவசேனாவும் இருப்பதாக மத்திய மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். அப்படியானால் பாதுகாப்பு துறை மந்திய மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவர் தான். எனவே அவர்கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தவேண்டும்.

விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு 2 படிகள் பின்வாங்கினால் அதன் மீதான மதிப்பு ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. எனவே அரசு பின்வாங்கி விவசாய சட்டங்கள் குறித்து மீண்டும் கலந்துரையாடவேண்டும். மேலும் விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அந்த சட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

120 பேரின் பட்டியல்
இதேபோல் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவை போல இயங்க கூடாது. நான் பா.ஜனதாவை சேர்ந்த 120 பேரின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. நான் இதை அமலாக்கத்துறையினரிடம் விரைவில் கொடுப்பேன்“ என்றார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக நியமிக்கப்பட போவதாக வெளியான தகவல் குறித்து பதில் அளித்த அவர், “சிவசேனா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எங்கள் கட்சி ஒரு பகுதியாக இல்லை என்றாலும், மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக மாறினால் நாங்கள் அதை வரவேற்போம்” என்றார்.

Next Story