அஞ்சுகிராமம் அருகே பட்டப்பகலில் துணிகரம் என்ஜினீயர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை


அஞ்சுகிராமம் அருகே பட்டப்பகலில் துணிகரம் என்ஜினீயர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Dec 2020 11:17 AM IST (Updated: 14 Dec 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சுகிராமம் அருகே என்ஜினீயர் வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம், சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சிங்கப்பூரில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹெப்சி (வயது 28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உண்டு.

மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், ஹெப்சிக்கு துணையாக அவரது பெற்றோர் அவருடன் தங்கியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 8.30 மணியளவில் ஹெப்சியும், குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றனர். பின்னர் 11.30 மணியளவில் ஆராதனை முடிந்து அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

நகைகள் கொள்ளை

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற போது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வீட்டின் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறையில் சென்ற போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, காப்பு, பிரேஸ்லெட், மோதிரம், கம்மல் என 57 பவுன் நகைகளை காணவில்லை.

இவர்கள் ஆலயத்திற்கு சென்ற போது மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்்சந்திரன் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

பரபரப்பு

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் என்ஜினீயர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story