தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு: ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு: ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு
x
தினத்தந்தி 15 Dec 2020 5:17 AM IST (Updated: 15 Dec 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவது தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததையடுத்து மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு
புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டபோது 50 சதவீத இடங்கள் தருவதாக கூறியே அரசிடம் தடையில்லா சான்றிதழ்கள் பெற்றன. ஆனால் ஒப்புக் கொண்டபடி தராமல் 23 சதவீத இடங்களையே ஒதுக்கீடு செய்து வந்தன. இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதுவை அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கக்கோரி பெற்றோர், மாணவர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு தரப்பில், ‘மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கின்றன’ என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடாக வழங்க 2006-ம் ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒப்புக்கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்
இந்த சூழலில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக காபினெட் அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அன்பரசு, பூர்வா கார்க், விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேல்முறையீடு
கூட்டத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளிடம் இருந்து 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Next Story