சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் 4 பெண்கள் உள்பட 8 பேர் பிடிபட்டனர்


சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் 4 பெண்கள் உள்பட 8 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 1 Feb 2021 3:11 AM GMT (Updated: 1 Feb 2021 3:11 AM GMT)

‘அயன்’ திரைப்பட பாணியில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை மாத்திரையாக மாற்றி சென்னைக்கு கடத்தி வந்த 4 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர், 

கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் அனுமதி பெற்ற சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.இந்த நிலையில் துபாய் நாட்டில் இருந்து வந்த சிறப்பு விமானங்களில் உள்ளாடை, பெட்டிகள் போன்றவற்றில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் நேற்று துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் மற்றும் சார்ஜா விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

தங்கமாத்திரை

அப்போது திருச்சியை சேர்ந்த கனகவள்ளி (வயது 56), நிசாந்தி (30), கலா பிரதீப் குமார் (53), ஜெயராஜ் (55), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹக்கீம் (25), தஸ்லீம் பாத்திமா (30), புதுக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஷ் (33), கபர்கான் (52) ஆகிய 8 பேர் வந்தனர். இவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்த போது, அதில் தங்க சங்கிலி, மோதிரங்கள் கைப்பற்றினார்கள். பின்னர் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தபோது அதிகாரிகளுக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.அதாவது துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து விமானத்தில் இருந்து வந்து இறங்கிய மேற்கண்ட நபர்கள் தங்கத்தை மாத்திரை வடிவில் மாற்றி ஒவ்வொருவரும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை விழுங்கி வந்ததாக தெரிவித்தனர்.

உடனே சுங்க இலாகா அதிகாரிகள் 4 பெண்கள் உள்பட 8 பேரையும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்திய ஸ்கேனிங் பரிசோதனையில் வயிற்றில் தங்க மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரியவந்தது.

ரூ.2 கோடி தங்கம்

உடனே டாக்டர்கள் உதவியுடன் இனிமா தந்து வயிற்றில் இருந்த 161 தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள், தங்க உருண்டைகள் ஆகியவற்றையும் கைப்பற்றினார்கள்.இதையடுத்து 8 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 150 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 8 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ‘அயன்’ படத்தில் கடத்தல் காரர்கள் போதை பவுடரை மாத்திரைகள் போல் விழுங்கி கடத்தி செல்வர். அதே பாணியில் சுங்க இலாகா அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயந்து தங்கத்தை மாத்திரைகளாக விழுங்கி கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story