மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராகிறார் காங்கிரசின் ஹரிபிரசாத்


மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராகிறார் காங்கிரசின் ஹரிபிரசாத்
x
தினத்தந்தி 8 Aug 2018 11:42 PM GMT (Updated: 8 Aug 2018 11:42 PM GMT)

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரசின் ஹரிபிரசாத் எதிர்க்கட்சி வேட்பாளராகிறார்.

புதுடெல்லி,

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ஹரிவனஷ் நாராயண் சிங் நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பா.ஜனதா நாடியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்காக தேசியவாத காங்கிரசின் வந்தனா சவான், தி.மு.க.வின் திருச்சி சிவா, நியமன உறுப்பினர் கே.டி.எஸ்.துளசி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்களும் வெளியாகின.

ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்க்கட்சியும் தங்கள் தரப்பில் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. எனவே காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி அந்த கட்சி எம்.பி.யான ஹரிபிரசாத்தை மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Next Story