மேற்கு வங்காளம் வந்த அமித்ஷாவுக்கு கருப்புகொடி காட்டி எதிர்ப்பு


மேற்கு  வங்காளம் வந்த அமித்ஷாவுக்கு  கருப்புகொடி காட்டி எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2018 10:27 AM GMT (Updated: 11 Aug 2018 10:27 AM GMT)

மேற்கு வங்காளம் வந்த அமித்ஷாவுக்கு கருப்புகொடி காட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொல்கத்தா, 

பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கொல்கத்தா நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கொல்கத்தா மேயோ சாலையில் அவர் இன்று பேசும் பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளில் அமித் ஷா மற்றும் மோடி உருவங்களுடன் கூடிய பதாகைகளும், பிளெக்ஸ் போர்டுகளும், பா.ஜ.க. கொடிகளும் களைகட்டின.

அந்த பதாகைகளுக்கு அருகாமையில் ‘அமித் ஷாவே, திரும்பிப்போ’ , ‘மேற்கு வங்காளத்துக்கு துரோகம் இழைத்த பா.ஜ.க.வை இங்கு அனுமதிக்க மாட்டோம்’ என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எதிர் பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. 

இன்று காலை டெல்லியில் இருந்து கொல்கத்தா நகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தை அமித் ஷா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மாநில தலைவர்கள் மேளதாளம், இசை, நடனத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

வரவேற்பை ஏற்றுகொண்டு  விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்தபோது வாசலில் கூடி இருந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கருப்பு கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினர். அமித் ஷாவின் வாகனம் அங்கிருந்து செல்ல வழி விடாமல் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள்களை வரிசையாக நிறுத்திவைத்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விரைந்து வந்த போலீசார் சாலையின் குறுக்கே இருந்த வாகனங்களை அகற்றி, அமித் ஷாவின் கார் செல்ல வழி ஏற்படுத்தி தந்தனர். அங்கிருந்து சென்ற அமித் ஷாவை வழி நெடுகிலும் திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்றனர். எழுச்சியான வரவேற்புக்கு இடையில் அவர் பொதுகூட்ட மேடையை சென்றடைந்தார் 

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்து இருந்தது. அசாம் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸ் திட்டமிட்டு போராட்டம் அறிவித்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி இருந்தனர்.

Next Story