கேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 187 ஆக உயர்வு - சபரிமலைக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவிப்பு


கேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 187 ஆக உயர்வு - சபரிமலைக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 10:45 PM GMT (Updated: 13 Aug 2018 9:03 PM GMT)

இந்தியாவில் இந்த பருவமழை காலத்தில் இதுவரை 7 மாநிலங்களில் 774 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 187 பேர் இறந்துள்ளனர்.

புதுடெல்லி,

கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.

வடமேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று புதிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

10 கம்பெனி ராணுவத்தினர், சென்னை ரெஜிமென்டை சேர்ந்த ஒரு குழுவினர், கப்பல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மீட்பு பணிகள் நடைபெறுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பார்வையிட்டு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையில் இருந்து நேற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் துணை அணையான செருதோனி அணையில் 5 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை பகுதியில் பெய்துவரும் மழையால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் பக்தர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆவணி மாத பிறப்பையொட்டி நடை திறப்பது வழக்கம். பம்பையில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. பம்பையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி, கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பம்பை நதி மீது உள்ள பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் போகிறது. இதனால் அந்த பாலத்தை கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் தற்போது வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஓணம் பண்டிகை, உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாம்பு படகு போட்டி ஆகியவை தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கி, மூணாறு, குமரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது 70 முதல் 80 சதவீதம் வரை ரத்தாகி உள்ளது. காபி, தேயிலை, ஏலக்காய், கிராம்பு, ரப்பர் போன்ற தோட்டப்பயிர்களில் ரூ.600 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

கேரளாவில் அதிகபட்சமாக இந்த பருவமழை காலத்தில் இதுவரை அதிகபட்சமாக 187 பேர் இறந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 171 பேரும், மேற்குவங்காளத்தில் 170 பேரும், மராட்டியத்தில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 45 பேரும், நாகாலாந்தில் 10 பேரும் இறந்துள்ளனர்.

கேரளாவில் 27 பேரும், மேற்குவங்காளத்தில் 22 பேரும் மாயமாகி உள்ளனர். மொத்தம் 245 பேர் காயம் அடைந்துள்ளனர். மராட்டியத்தில் 26 மாவட்டங்களும், அசாமில் 23, மேற்குவங்காளத்தில் 22, கேரளாவில் 14, உத்தரபிரதேசத்தில் 12, நாகாலாந்தில் 11, குஜராத்தில் 10 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27,552 ஹெக்டேரில் பயிர்கள் நாசமாகியுள்ளன.தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 குழுக்கள் (ஒரு குழுவுக்கு 45 வீரர்கள்) அசாமிலும், உத்தரபிரதேசம், மேற்குவங்காளத்தில் தல 8 குழுக்கள், குஜராத்தில் 7, கேரளா, மராட்டியத்தில் தலா 4, நாகாலாந்தில் ஒரு குழுவும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story