மேகதாது அணை கட்டும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு


மேகதாது அணை கட்டும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு
x
தினத்தந்தி 30 Nov 2018 11:15 PM GMT (Updated: 30 Nov 2018 9:33 PM GMT)

மேகதாது அணை கட்டுவதற்கான செயல்திட்ட முன்வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.

புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடிக்கு அணை கட்ட கர்நாடக அரசு 2013-ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்காக வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்து அணை கட்ட அனுமதியும் கோரியது. மறைந்த, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பு காரணமாக இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கர்நாடக அரசு சார்பில் மீண்டும் இதே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்டு மேகதாதுவில் அணை திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த 22-ந் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படியும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதினார். மத்திய அரசின் ஒப்புதலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்றும் பல தரப்பில் இருந்தும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேகதாது பகுதியில் புதிய அணைக்கட்டுக்கான சாத்தியக்கூறு அறிக்கையின் மீது மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக நேற்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம், தமிழக அரசு வக்கீல் கே.வி.விஜயகுமார் ஆகியோர் தயாரித்து தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எதிராக டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு பல ஆண்டுகளாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனரகம், கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவில் 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் திட்டத்தை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்து இருக்கிறது.

இந்த முன்வரைவுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதி சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். தங்கள் பகுதியில் தண்ணீர் கொள்ளளவை அதிகரித்து அதிகமான நீர்ப்பாசனத்துக்கு கர்நாடகா சட்டவிரோதமாக முயற்சிக்கிறது. இது தமிழக டெல்டா பகுதி விவசாயிகளின் முற்றிலும் விரோதமான நடவடிக்கை ஆகும்.

எனவே, மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடந்த மாதம் 22-ந்தேதி பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா அரசு மற்றும் காவிரி நீரவாரி நிகம் நிறுவனம் மேகதாது பகுதியில் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்துக்கான புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல்செய்வதற்கு அளித்துள்ள ஒப்புதலுக்கு தடை விதிக்கவேண்டும்.

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் கடந்த 22-ந்தேதி வெளியிட்ட உத்தரவையும் வாபஸ் பெற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

கர்நாடக அரசு மற்றும் காவிரி நீரவாரி நிகம் நிறுவனம் ஆகியோர் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைக்கும் புதிய அணை கட்டும் முயற்சிக்கும் தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுபற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றே செயல்படுத்தவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

இது தெரிந்தும் கர்நாடக அரசு வேண்டும் என்றே மத்திய நீர்வள ஆணையத்தில் மேகதாது அணைக்கான வரைவு திட்டத்துக்கு அனுமதி பெற்று இருக்கிறது. நீர்வள ஆணையமும் தனக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும் அனுமதி வழங்கியுள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று என்ன சொல்லி இருக்கிறோமோ, அதையே 3-ந்தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தெரிவிப்போம்.

பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்லும் கர்நாடக அரசின் பேச்சை நம்ப தமிழக அரசு தயாராக இல்லை. ஏற்கனவே, மாநிலத்தின் அவசரநிலை கருதி தமிழக முதல்-அமைச்சர் ஒரு கடிதம் எழுதி பேச்சுவார்த்தை நடத்துமாறு கர்நாடக அரசிடம் கேட்டபோது, ஒரு மரியாதைக்குக்கூட அவர்கள் பதில் எழுதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story