கேரள நாடாளுமன்ற தேர்தலில் ‘காங்கிரஸ், பா.ஜனதா பேராசை, அவர்களுக்கு வீழ்ச்சியை தரும்’ - பினராயி விஜயன் தாக்கு


கேரள நாடாளுமன்ற தேர்தலில் ‘காங்கிரஸ், பா.ஜனதா பேராசை, அவர்களுக்கு வீழ்ச்சியை தரும்’ - பினராயி விஜயன் தாக்கு
x
தினத்தந்தி 23 April 2019 9:45 PM GMT (Updated: 23 April 2019 9:39 PM GMT)

கேரளாவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் பேராசை, அவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வீழ்ச்சியை தேடித்தரும் என பினராயி விஜயன் சாடினார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரே நாளில் தேர்தல் நடந்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன், தன் சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம், பினராயியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று ஓட்டு பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளை கடுமையாக சாடினார். “அவர்கள் தங்கள் பேராசையால் கேரள மாநிலத்தில் வீழ்ச்சியை சந்திக்கப்போவதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள்” என நிருபர்களிடம் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவை பெயர் குறிப்பிடாமல், “ வட மாநிலங்களில் வகுப்புவாத வன்முறைகளை நடத்தியவர்கள், சாலைகளில் அணிவகுத்து பேரணியாக சென்றாலே இந்த மாநில மக்களின் இதயங்களை வெற்றி கொண்டு விடலாம் என நினைக்கின்றனர்” என்று பினராயி விஜயன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியோ பிரசார கூட்டங்களில், தனது தேர்தல் அறிக்கை பற்றிக்கூட பேசவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ மக்களிடையே தவறான புரிந்து கொள்ளலை உருவாக்கி அதன்மூலம் ஓட்டுகளை அள்ளிவிடலாம் என அவர்கள் (காங்கிரசார்) நம்புகின்றனர். அது நிறைவேறப்போவது இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர், “நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கும், பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசுக்கும் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்” என குறிப்பிட்டார்.


Next Story