தேசிய செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைவர்கள் ஆதரவு + "||" + RSS and BJP leaders support Kashmir's cancellation of special status

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைவர்கள் ஆதரவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைவர்கள் ஆதரவு
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், துணைத்தலைவர் சுரேஷ் ஜோஷி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் துணிச்சலான முடிவை இதயபூர்வமாக வரவேற்கிறோம். நாட்டு நலனுக்கு இது மிகவும் அவசியமானது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நலன்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்த முடிவை வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


அத்வானி

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைக்காக பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பாராட்டுகிறேன். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது ஜனசங்க காலத்தில் இருந்தே பா.ஜனதாவின் மைய கொள்கைகளில் ஒன்றாகும். இது, தேச ஒருமைப்பாட்டை நோக்கிய துணிச்சலான நடவடிக்கை.

ஜம்மு, காஷ்மீர், லடாக் பிராந்தியங்களில் அமைதி, வளமை, முன்னேற்றம் நிலவ பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அருண் ஜெட்லி

பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு அந்தஸ்து, பிரிவினைக்கு வழி வகுக்கிறது. எந்த நாடும் இதை அனுமதிக்க முடியாது. தேச ஒருமைப்பாட்டை நோக்கிய ஞாபகார்த்தமான முடிவு. இம்முடிவால் காஷ்மீர் மக்களுக்கு ஏராளமான முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கும்.

ஒரு வரலாற்று தவறு, சரி செய்யப்பட்டுவிட்டது. பின்வாசல் வழியாக வந்த 35ஏ பிரிவும் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், “துணிச்சலான, வரலாற்று சிறப்புமிக்க முடிவு. மாபெரும் இந்தியா, ஒரே இந்தியாவுக்கு வணக்கம்” என்று கூறியுள்ளார்.

எஸ்.எம்.கிருஷ்ணா

ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், “துணிச்சலான, வரலாற்று சிறப்புமிக்க முடிவு” என்று பாராட்டி உள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, “இது ஒரு முக்கியமான முடிவு. காஷ்மீர் குறித்த தெளிவின்மைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைவதை இது உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா பொதுச்செயலாளரும், காஷ்மீர் விவகாரங்களை கவனிப்பவருமான ராம் மாதவ் கூறியதாவது:-

என்ன ஒரு போற்றத்தக்க நாள். சியாம் பிரசாத் முகர்ஜி முதல் ஆயிரக்கணக்கானோரின் தியாகம் மதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 70 ஆண்டுகால கோரிக்கை, நம் கண் முன்னால், நம் வாழ்நாளில் நிறைவேறி இருக்கிறது. இதை கற்பனை செய்தாவது பார்த்திருப்போமா? இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், “காஷ்மீர் வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

விசுவ இந்து பரிஷத்

விசுவ இந்து பரிஷத், “370-வது பிரிவு நீக்கம் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளது.

அண்டராஷ்டிரீய இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, “இந்த அற்புதமான முடிவை பாராட்டுகிறேன். இந்துஸ்தானின் நீண்டநாள் கனவு நிறைவேறி உள்ளது. இனிமேல், காஷ்மீர் இந்துக்களுக்கு தங்கள் வீடுகளும், நிலங்களும் திரும்பக் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

பெண்கள் ஆணையம்

தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா, “துணிச்சலான நடவடிக்கை. இந்த அரசால் மட்டுமே இதை செய்ய முடியும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கோரிக்கை நிறைவேறி உள்ளது” என்று கூறியுள்ளார்.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், “72 ஆண்டு கால தவறை சரி செய்த பிரதமருக்கும், உள்துறை மந்திரிக்கும் பாராட்டுகள். என்ன விலை கொடுத்தாவது, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.