காஷ்மீரில் நிலைமை, அரசு கூறுவதற்கு நேர்மாறாக உள்ளது - டெல்லி திரும்பிய சீதாராம் யெச்சூரி பேட்டி


காஷ்மீரில் நிலைமை, அரசு கூறுவதற்கு நேர்மாறாக உள்ளது - டெல்லி திரும்பிய சீதாராம் யெச்சூரி பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2019 10:45 PM GMT (Updated: 30 Aug 2019 9:14 PM GMT)

காஷ்மீரில் நிலைமை அரசு கூறுவதற்கு நேர்மாறாக உள்ளது என்று டெல்லி திரும்பிய சீதாராம் யெச்சூரி கூறினார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உடல்நிலை சரியில்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் தாரிகாமியும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் சென்று அவரை சந்திக்க முயன்றபோது 2 முறை திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பெற்று போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அவர் ஸ்ரீநகர் சென்றார். அவரிடம் அதிகாரிகள் இன்றே நீங்கள் உங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்ப வேண்டும் என்றனர்.

ஆனால் யெச்சூரி தாரிகாமியின் உடல்நிலை குறித்து அறிக்கை பெற்று மறுநாள் தான் திரும்ப முடியும் என்று அவர்களிடம் கூறினார். அதன்படி 2 நாட்களும் அவர் தாரிகாமியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் நேற்று மதியம் யெச்சூரி அங்கிருந்து புறப்பட்டு டெல்லி திரும்பினார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தாரிகாமியை 2 நாட்களும் சந்தித்து பேசினேன். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. எனவே அவருக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தாரிகாமியை தவிர வேறு யாரையும் தான் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கு போலீசார் முழுநேரமும் தொடர்ந்து என்னுடனேயே இருந்தனர். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினேன். அங்கிருந்து வெளியில் செல்லவும் என்னை அனுமதிக்கவில்லை. எனது பயணம் குறித்தும், தாரிகாமி உடல்நிலை குறித்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீரில் நிலைமை எப்படி இருக்கிறது? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து தாரிகாமி வீட்டுக்கு செல்லும் வழியில் நான் பார்த்தது, மத்திய அரசு கூறுவதற்கு முற்றிலும் நேர்மாறாக நிலைமை உள்ளது. இதற்கு மேல் விரிவாக கூறமுடியாது” என்றார்.


Next Story