பிரியங்கா செல்போன் ஒட்டுக்கேட்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு


பிரியங்கா செல்போன் ஒட்டுக்கேட்பு - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Nov 2019 12:15 AM GMT (Updated: 3 Nov 2019 9:51 PM GMT)

காங்கிரஸ்பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் வாட்ஸ்-அப் தகவல் திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

புதுடெல்லி,

உலகமெங்கும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்களில் பெரும்பாலோர் ‘வாட்ஸ்-அப்’ குறுந்தகவல் சேவை செயலியை பயன் படுத்தி வருகிறார்கள்.

நமது நாட்டைப் பொறுத்தமட்டில் 40 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றுள்ள ‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி (‘ஹேக்’), உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தின.

இது தொடர்பாக ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் கூறும்போது, “தூதரக அதிகாரிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட உலகமெங்கும் 1,400 ‘வாட்ஸ்-அப்’ உபயோகிப்பாளர்கள், இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தது.

அது மட்டுமின்றி, செல் போனில் ‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளவர்களுக்கு தாங்கள் சிறப்பு தகவல் அனுப்பி இருப்பதாகவும் ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் கூறியது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களுக்கு இப்படி சிறப்பு தகவல் வந்துள்ளதாக பொதுவெளியில் கூறினர்.

இதுபற்றிய தகவல்கள் வெளியானதும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கவலை தெரிவித்தார். மத்திய அரசு இந்த விவகாரத்தை முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள் சட்ட விரோத ஊடுருவல் நடந்ததின் பின்னணியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழும நிறுவனம் மீது சந்தேக பார்வை விழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்வதாக ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலே டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள், “தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரது அந்தரங்க பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதாக ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் வந்திருக்கிறதே?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போனில் ‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள்ளும் சட்ட விரோதமாக புகுந்து உளவு பார்த்துள்ளனர்; ஒட்டுக்கேட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘வாட்ஸ்-அப்’ உளவு ஊழல் தகவல்கள் அதிரவைக்கின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னால் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களை பாரதீய ஜனதா அரசு உளவுபார்க்கிறதா?

கடந்த மே மாதத்தில் இருந்தே இந்த உளவு மென்பொருள் இருப்பது அரசுக்கு தெரியுமா?

பல்வேறு தரப்பினரின் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. அதாவது ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. இதை ‘வாட்ஸ்-அப்’ நிறுவனமே தகவலாக சம்மந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி உள்ளது. அந்த தகவல் பிரியங்காவின் செல்போனுக்கும் வந்துள்ளது.

சட்ட விரோதமாக பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தித்தான் பிரியங்காவின் செல்போன் சட்ட விரோதமாக ஊடுருவப்பட்டுள்ளதா என்பது பற்றி ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் எதுவும் கூறவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு சதி செய்து மவுனத்தை கடைப்பிடிக்கிறது. ஊடகங்களில் கதைகளை வளர்ப்பதற்கான ஆதாரங்களின் பின்னால் மத்திய அரசு ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு மோசமான பாத்திரத்தை கையில் எடுத்துள்ளது.

இப்போது எழுந்துள்ள கேள்வி, இந்திய மக்களுக்கு அந்தரங்க உரிமை உள்ளதா? சட்டத்தின் ஆட்சி அல்லது அந்தரங்க உரிமை என்பது மோடி அரசின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ற வேடிக்கையாகி இருக்கிறதா? இந்த பிரச்சினை, தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா, இந்த ‘வாட்ஸ்-அப்’ உளவு ஊழல் விவகாரம் குறித்து வரும் 15-ந் தேதி நடக்கிற நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதே போன்று தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவருமான சசி தரூர், இந்த விவகாரம் குறித்து நிலைக்குழு உறுப்பினர்களுடன் இ-மெயில் வழியாக விவாதிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 13-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் ‘வாட்ஸ்-அப்’ செயலி ஊழல் விஸ்வரூபம் எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனில் ஒட்டுக்கேட்பது எப்படி?

செல்போனில் ‘வாட்ஸ்-அப்’ செயலியில் எப்படி சட்டவிரோதமாக ஊடுருவி உளவுபார்க்கிறார்கள், ஒட்டுக்கேட்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

‘வாட்ஸ்-அப்’ செயலிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதற்கு பின்னால் இருப்பது ‘பெகாசஸ்’ என்னும் உளவு மென்பொருள்தான் என்று சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு செல்போனில் வீடியோகால் வருகிறபோதுதான் இந்த உளவு மென்பொருள் செல்போன்களுக்குள் ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே செல்போனில் வீடியோகால் வருகிறபோது, அதை அந்த நபர் ஏற்று பேசினாலும் சரி, ஏற்காதபோதும் சரி, இந்த உளவு மென்பொருள் தானாக ‘இன்ஸ்டால்’ ஆகி விடும் என்று கூறப்படுகிறது.

இப்படி செல்போன்களுக்குள் ஊடுருவிய பின்னர் அவர்களின் அனைத்து அழைப்புகள், குறுந்தகவல்கள், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்தையும் அந்த மென்பொருள் கண்காணித்து வரும். அது மட்டுமின்றி செல்போனில் கேமராக்கள் மற்றும் ‘மைக்’குகளை இயக்கி அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் உளவு பார்க்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.


Next Story