மராட்டிய கவர்னர் எழுதிய கடிதங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பாரதீய ஜனதா வரவேற்பு


மராட்டிய கவர்னர் எழுதிய கடிதங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பாரதீய ஜனதா வரவேற்பு
x
தினத்தந்தி 24 Nov 2019 11:00 PM GMT (Updated: 24 Nov 2019 8:03 PM GMT)

மராட்டிய விவகாரத்தில், கவர்னர் எழுதிய கடிதங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பாரதீய ஜனதா வரவேற்றுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நேற்று முன்தினம் அதிரடியாக ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்றது.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, இந்த விவகாரத்தில் எடுத்த முடிவுகளுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கை தாக்கல் செய்தன.

இந்த வழக்கை நேற்று விடுமுறை நாளாக இருந்தபோதும், சிறப்பு நிகழ்வாக மூத்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய பரிந்துரை செய்தும், தேவேந்திர பட்னாவிசை ஆட்சி அமைக்க அழைத்தும் கவர்னர் எழுதிய கடிதங்களை இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டனர்.

இதற்கு 2 நாள் அவகாசம் வேண்டும் என்று அவர் தீவிர கோரிக்கை விடுத்த போதும், அதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும் இதில் மத்திய, மாநில அரசுகளுக்கும், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும், துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை பாரதீய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

இந்த கட்சியின் மும்பை தலைவர் ஆசிஷ் ஷெலார் கருத்து தெரிவிக்கையில், “அஜித் பவார், சட்டசபை தேசியவாத காங்கிரஸ் தலைவராக தொடர்கிறார் என்ற எங்கள் வாதத்துக்கு சுப்ரீம் கோர்ட்டின் முடிவு பலம் சேர்க்கிறது. இப்போது விளையாட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கைகளில். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அஜித் பவார் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும்” என கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறும்போது, “போலியான ஆவணங்களின் அடிப்படையில் பதவி ஏற்பு நடந்துள்ளது. தேவேந்திர பட்னாவிசுக்கு பெரும்பான்மை இல்லை. அவர் பதவி விலகி விடுவது நல்லது. இல்லாவிட்டால் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டில் தோல்வியைத் தழுவ நேரிடும்” என்றார்.

தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான் கூறினார்.


Next Story