தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும் - டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும் - டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Dec 2019 10:45 PM GMT (Updated: 18 Dec 2019 9:46 PM GMT)

“தமிழகத்துக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும்” என டெல்லியில் நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

பட்ஜெட்டை முன்னிட்டு மாநில அரசுகளுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், துணைச்செயலாளர் (நிதி) அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்திய அம்சங்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை குறித்த நேரத்தில் தர கோரிக்கை விடுத்தேன். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் 2017-2018-ம் ஆண்டுக்கு ரூ.4073 கோடி நிலுவைத்தொகை உள்ளது. அதையும் உடனடியாக தர கோரிக்கை வைத்து இருக்கிறோம். மத்திய நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் ரூ.3,369 கோடியை உடனடியாக விடுவிக்க கோரியிருக்கிறோம்.

தமிழகம் நீர்ப்பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால் நீண்டகால திட்டங்களின் முன்மொழிவுக்கு அனுமதியும், நிதியும் கேட்டோம். உதாரணமாக கோதாவரி-காவிரி இணைப்பை பட்ஜெட்டில் அறிவித்து, நிதி ஒதுக்கவும் கேட்டோம். அதைப்போல நடந்தாய் வாழி காவிரி திட்டம், டெல்டா மாவட்டங்களால் கிரான்ட் அணைக்கட்டு கால்வாய் புதுப்பித்தல் பணிகளுக்கு ஒப்புதலும், நிதி உதவியும் கேட்டோம். சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசியதாவது:-

தமிழகம் வறட்சியால் இருந்த நேரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்ட அந்த உதவித்தொகை, அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப தொடர்ந்து வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின் அவருடைய தந்தையின் மறைவுக்கு பிறகு இரட்டை வேடம் போடுவதையே அரசியல் பழக்கமாக கொண்டு இருக்கிறார். முதலில் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு கால தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டு தேர்தல் தேதி அறிவித்த நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். இதில் இருந்தே அவர் எந்த தேர்தலாக இருந்தாலும் சந்திப்பதற்கு அச்சப்படுகிறார் என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story