சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க தடுப்பு காவல் மையம்: கர்நாடகத்தில் திறப்பு


சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க தடுப்பு காவல் மையம்: கர்நாடகத்தில் திறப்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 8:49 PM GMT)

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க கர்நாடகத்தில் முதல் தடுப்பு காவல் மையம் திறக்கப்பட்டது.

பெங்களூரு,

மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றி உள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மங்களூருவில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சொன்டிகொப்பாவில் தடுப்பு காவல் மையம் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து திறக்கப்பட்டு உள்ளன. இது கர்நாடகத்தில் முதல் தடுப்பு காவல் மையம் ஆகும்.

இதுகுறித்து கர்நாடக அரசின் சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஜனவரி 1-ந் தேதிக்குள் மத்திய நிவாரண முகாம் அமைக்க வேண்டும் என்று அரசிடம் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்தது. 20 ஆண்டுகள் பழைய விடுதி கட்டிடம் ஒன்று பெங்களூரு அருகே சொன்டிகொப்பா என்ற இடத்தில் இருந்தது. அதில் ஏழை குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனர். அந்த விடுதியில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததால், அது மூடப்பட்டது.

அதன் காரணமாக இந்த விடுதி கட்டிடத்தை மத்திய நிவாரண மையமாக மாற்றியுள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-

இது தடுப்பு காவல் மையம் என்று அழைக்கப்படுகிறது. இது தவறு. இது தடுப்பு காவல் மையம் அல்ல. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இந்த மையம் அமைக்கப்படவில்லை. இந்த மையம் இன்னும் திறக்கப்படவில்லை. அது திறக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியவில்லை.

ஒருவேளை இந்த தடுப்பு காவல் மையம் திறக்கப்பட்டிருந்தால், அங்கு யாராவது அடைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் அங்கு ஒருவர் கூட இல்லை. இந்தியாவின் விசா காலம் முடிந்தும் கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் ஆப்பிரிக்கர்களை அடைத்து வைக்கவே இந்த மையம் திறக்கப்படுகிறது.

அவர்களின் சட்டவிரோத நடவடிக்கையால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. அத்தகையவர்களை பிடித்து வந்து இந்த மையத்தில் வைத்து, அதன் பிறகு அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story