அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும்: தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் மீதான தாக்குதல் - ராகுல் காந்தி


அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும்: தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் மீதான தாக்குதல் - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 27 Dec 2019 11:15 PM GMT (Updated: 27 Dec 2019 9:49 PM GMT)

தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் மீதான தாக்குதல் என்றும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் தேசிய பழங்குடியினர் நடன திருவிழா நேற்று தொடங்கியது. அதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை என்று மத்திய அரசு கூறுவது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

மக்கள்தொகை பதிவேடோ, குடிமக்கள் பதிவேடோ இரண்டுமே ஏழை மக்கள் மீதான வரிச்சுமைதான். பணமதிப்பு நீக்கம் உங்களுக்கு தெரியும். அது மக்கள் மீதான வரிச்சுமை. வங்கிக்கு சென்று பணத்தை போடுங்கள், ஆனால் பணத்தை எடுக்காதீர்கள் என்றார்கள். அந்த பணம் எல்லாம் 15 அல்லது 20 பெரும் பணக்காரர்களுக்கு சென்றது. தேசிய மக்கள்தொகை பதிவேடும் அதே போன்றதுதான்.

ஏழை மக்கள், அதிகாரிகளை நாடிச்செல்ல வேண்டும். ஆவணங்களை காண்பித்து, லஞ்சம் கொடுக்க வேண்டும். தங்களது பெயரில் சிறிய அளவில் பிழை இருந்தால்கூட அதை சரிக்கட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும். இப்படி கோடிக்கணக்கான ரூபாய், ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்டு, பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டுக்கு செல்லும். இது உண்மை. இது ஏழை மக்கள் மீதான தாக்குதல்.

எங்களிடம் உள்ள எல்லா பணத்தையும் பறித்துக்கொண்டாலும், எங்களுக்கு திரும்ப என்ன கிடைத்தது என்றுதான் ஏழை மக்கள் கேட்கிறார்கள். வேலை எப்படி கிடைக்கும் என்று கேட்கிறார்கள். முன்பு 9 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், நவீன கணக்கீட்டின்படி, 4 சதவீதம்தான் இருக்கிறது. பழைய முறைப்படி கணக்கிட்டால், 2.5 சதவீத வளர்ச்சிதான் இருக்கும்.

இந்தியா, வன்முறையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்றும், வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது என்றும் உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

ஆனால், பிரதமர் மோடிக்கு இதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பிரதமருக்கான கடமைகளை செய்ய முடியவில்லை. அவரால் நாட்டின் நேரம் வீணாகி வருகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராய்ப்பூரில், தேசிய பழங்குடியின நடன திருவிழாவை ராகுல் காந்தியும், மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகலும் இணைந்து தொடங்கி வைத்தனர். அதில், ராகுல் காந்தி, பழங்குடியின தலைப்பாகை அணிந்து மேளம் இசைத்து நடனம் ஆடினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இதுபோன்ற திருவிழாக்கள்தான், வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துகின்றன. நாட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அனைத்து சாதி, மத, இனத்தை சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றால்தான் நாட்டை நிர்வகிக்க முடியும். மக்களை ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள செய்வதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story