ஷீரடி சாய்பாபாவின் பிறப்பிடம் எது? - மராட்டியத்தில் சர்ச்சை


ஷீரடி சாய்பாபாவின் பிறப்பிடம் எது? - மராட்டியத்தில் சர்ச்சை
x
தினத்தந்தி 18 Jan 2020 7:56 PM GMT (Updated: 18 Jan 2020 7:56 PM GMT)

ஷீரடி சாய்பாபாவின் பிறப்பிடம் எது என்பது குறித்து மராட்டியத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

மும்பை,

அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தினசரி இந்த கோவிலுக்கு ஏராளமான உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரி தான் சாய்பாபாவின் பிறந்த இடம் என ஒருதரப்பினரால் நம்பப்பட்டு வருகிறது. அங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாய்பாபாவை தரிசனம் செய்கிறார்கள்.

இந்தநிலையில், பாத்ரியை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளது. பாத்ரி மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். இதன் காரணமாக ஷீரடியின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என ஷீரடியை சேர்ந்தவர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

எனவே பாத்ரி, சாய்பாபாவின் பிறப்பிடம் என்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் பாத்ரிதான் சாய்பாபா பிறந்த இடம் என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரானி அப்துல்லா கான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சாய்பாபாவின் கர்மபூமி ஷீரடி. அவரது ஜென்மபூமி பாத்ரி’ என்றார்.

இது குறித்து பாரதீய ஜனதா எம்.பி. சுஜய் விகே பாட்டீல் கூறுகையில், சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து எந்தவிதமான சர்ச்சையும் இல்லை. அரசாங்கம் மாறிய பின்னர் பாத்ரி தான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்பதற்கு புதிய சான்றுகள் எங்கிருந்து வந்தது? சாய்பாபாவின் பிறப்பிடம் எது என்பதை எந்த அரசியல் தலைவரும் தீர்மானிக்க முடியாது. இதில் அரசியல் தலையீடு தொடர்ந்தால், ஷீரடி மக்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’ என்றார்.


Next Story