முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது இந்தியா - கொரோனா ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களின் எண்ணிக்கை 129 ஆக குறைந்தது


முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது இந்தியா - கொரோனா ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களின் எண்ணிக்கை 129 ஆக குறைந்தது
x
தினத்தந்தி 29 April 2020 11:46 PM GMT (Updated: 29 April 2020 11:46 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது. தீவிரமான பாதிப்புக்கு ஆளான ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களின் எண்ணிக்கை, இரண்டு வாரங்களில் 170-ல் இருந்து 129 ஆக குறைந்தது.

புதுடெல்லி, 

உலகின் வளர்ந்த நாடுகள்கூட கொரோனாவுக்கு எதிரான போரில் பலத்த சேதங்களை சந்தித்துள்ள நிலையில், நமது நாடு 130 கோடி மக்களை கொண்டிருந்தும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக அமைந்து இருக்கிறது.

ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை இந்தியா தொடர்ந்து பல வகையிலும் கட்டுப்படுத்திதான் வருகிறது.

2 வார காலத்தில், நமது நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களின் எண்ணிக்கை 170-ல் இருந்து 129 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றே இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை சற்றே குறைந்தாலும், பாதிப்பு பெரிதாக இல்லை. இந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 325-ல் இருந்து 307 ஆக குறைந்துள்ளன.

ஆனால் தீவிரம் இல்லாத ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை 207-ல் இருந்து 297 ஆக உயர்ந்து இருக்கிறது.

சிவப்பு மண்டலத்தில் 28 நாட்களும், ஆரஞ்சு மண்டலத்தில் 14 நாட்களும் தொடர்ந்து யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்கிற பட்சத்தில் அந்த மண்டலம், பசுமை மண்டலமாக மாற்றப்பட்டு விடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பசுமை மண்டலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கடந்த 15-ந் தேதி 170 மாவட்டங்களை (25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவை) ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்தது. அவற்றில் 47 மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் கொத்து கொத்தாக கொரோனா தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளை கொண்டிருந்தன. 325 மாவட்டங்களில் கள அளவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒரு கொரோனா நோயாளியைக்கூட கொண்டிருக்கவில்லை.

நேற்று முன்தினம் மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, 47 மாவட்டங்களில் 2 வாரமாக ஒருவருக்கு கூட கொரோனா புதிதாக தாக்கவில்லை, 39 மாவட்டங்களில் 21 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தாக்கம் இல்லை, 28 நாட்களாக 17 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா புதிதாக இல்லை என்று பட்டியலிட்டார். இது இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அடையாளமாக தெரிகிறது.

9 மாநிலங்களில் 15 மாவட்டங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக 7 மாவட்டங்கள் (தெலுங்கானாவின் ஐதராபாத், மராட்டியத்தின் புனே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர், குஜராத்தின் ஆமதாபாத், மராட்டியத்தின் மும்பை மற்றும் டெல்லி) மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்டங்களின் வரிசையில்தான் சென்னை இடம் பெற்றுள்ளது.

இந்த 9 மாநிலங்களின் 15 மாவட்டங்கள்தான் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் முக்கிய இடம் வகிக்கின்றன. 7 மாவட்டங்கள்தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. இந்த மாவட்டங்களை மிக தீவிரமாக கண்காணித்து, கட்டுப்படுத்தி, சோதனைகள் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளித்து நாம் வெற்றி பெற வேண்டியதிருக்கிறது என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய அளவில் ஊரடங்கு போடுவதற்கு முன்னர் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3.25 நாளில் இரட்டிப்பானது. தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10.9 நாளில்தான் இரட்டிப்பாகிறது” என கூறினார்.

Next Story