காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2020 9:23 AM GMT (Updated: 26 Dec 2020 9:23 AM GMT)

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தில் கனிகாம் என்ற கிராமத்தில் நேற்று மதியம் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதையடுத்து அந்த பகுதியை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தபடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், வெகு நேரமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. பின்னர் இரவு நேரத்தில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்று காலை பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த மோதலில் தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டி.ஜி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில், கனிகாம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story