பெகாசஸ் விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை


பெகாசஸ் விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 27 July 2021 2:09 PM GMT (Updated: 27 July 2021 2:09 PM GMT)

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் இரு அவைகளும் முடங்கின. இந்த சூழலில், இன்று காலை நாடாளுமன்றம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சியினர் பெகாசஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து மதியம் மூன்று மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்தான், பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தி.மு.க சார்பில் மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, கொறடா மாணிக்கம் தாகூர், மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், கேரளா காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்தக்கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே பெகாசஸ் மற்றும் விவசாயச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். 7 கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே தெரிவித்தார்.

Next Story