சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்தது - இந்தியா பதிலடி


சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்தது - இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 30 Sep 2021 7:09 PM GMT (Updated: 1 Oct 2021 12:32 AM GMT)

லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே 5-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து இருநாட்டுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைப்பகுதியில் இருந்து வீரர்கள் திரும்பப்பெறப்பட்டனர். ஆனாலும், தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இரு நாடுகளும் படைகளை அங்கு நிலைநிறுத்தியுள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பரஹோடி பகுதிக்குள் சுமார் 100 சீன ராணுவ வீரர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் பரஹோடி பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஆனால், சில மணிநேரங்கள் பரஹோடி பகுதிக்குள் நுழைந்திருந்த சீன படையினர் இந்திய படையினர் வருவதற்குள் இந்திய எல்லையில் இருந்து பின்வாங்கி தங்கள் நாட்டிற்கே சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இந்திய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த ஆண்டு லடாக்கில் கல்வான் மோதல் ஏற்பட்ட இந்தியா தான் காரணம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியிருந்தது. 

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட இந்தியா தான் காரணம் எனவும், இரு நாட்டிற்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றார்.

இந்நிலையில், சீனாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வன் மோதலுக்கு இந்தியா தான் காரணம் என்ற சீனாவின் கருத்தை முழுமையாக நிராகரிக்கிறோம். இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு மாறாக எல்லையில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த சீன வீரர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கிழக்கு லடாக்கில் உள்ள எல்லையில் பிரச்சினை ஏற்பட காரணமாகும். 

எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்தது. இந்தியாவின் பாதுகாப்பு நலன் முழுவதுமாக காக்கப்பட வேண்டும் என்பதற்காக சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் இந்த பதிலடி கொடுக்கப்பட்டது.      
இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, கிழக்கு லடாக்கில் எல்லைப்பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க சீனா செயல்படும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story