மராட்டிய அரசுக்கு சித்தராமையா, குமாரசாமி கண்டனம்
கர்நாடக எல்லையில் உள்ள 865 கிராம மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிவித்துள்ள மராட்டிய அரசுக்கு சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக எல்லையில் உள்ள 865 கிராம மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிவித்துள்ள மராட்டிய அரசுக்கு சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சகித்து கொள்ள சாத்தியமில்லை
கர்நாடக மாநில எல்லையில் உள்ள 865 கிராம மக்களுக்கு மராட்டிய அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கன்னடர்களின் எதிர்ப்பையும் மீறி நமது எல்லையில் உள்ள 865 கிராம மக்களுக்கு மராட்டிய அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்திருப்பது கண்டித்தக்கது. உடனடியாக அந்த உத்தரவை மராட்டிய அரசு திரும்ப பெற வேண்டும்.
மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையை சகித்து கொள்ள சாத்தியமே இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் எல்லை பிரச்சினை முடியும் வரை, 2 மாநில அரசுகளும் அமைதி காக்கவும், இதுபோன்று காப்பீடு திட்டத்தை அறிவிக்க கூடாது என்று அமித்ஷா கூறி இருந்தும் கூட மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையை எடுத்தது கண்டித்தக்கது', என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு மவுனம்
இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மராட்டிய அரசு கர்நாடகத்திற்கு எதிராக ஒவ்வொரு பிரச்சினையாக தூண்டி வருகிறது. மராட்டிய அரசின் இந்த செயல்களை பார்த்து கொண்டு மத்திய பா.ஜனதா அரசு மவுனமாக இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மவுனம் காப்பது ஏன்?.
கர்நாடக எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு மராட்டிய அரசு காப்பீடு திட்டத்தை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக மராட்டிய அரசு திரும்ப பெற வேணடும்', என்று கூறியுள்ளார்.