தொழில்நுட்ப பயன்பாடு ஊழலை குறைத்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு
வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறோம் என்றும், மேலும் தொழில்நுட்ப பயன்பாடால் ஊழலும் குறைந்துள்ளதாக பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
பெங்களூரு:
வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறோம் என்றும், மேலும் தொழில்நுட்ப பயன்பாடால் ஊழலும் குறைந்துள்ளதாக பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப மாநாடு
கர்நாடக அரசின் அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டுதோறும் பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான 25-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு தொடக்க விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் இந்த வசதிகளை மேம்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கப்படும். உடல் ஆரோக்கிய தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், கல்வி தொழில்நுட்பம் உள்பட எல்லா துறைகளிலும் இந்தியர்கள் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்தியா சிக்கலான தலமாக திகழாது. அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தலமாக விளங்கும்.
அழைப்பு விடுக்கிறேன்
அன்னிய நேரடி முதலீடாக இருந்தாலும் சரி, பறக்கும் கேமராக்களை இயக்கும் விதிகளை தாராளமயமாக்குவதாக இருந்தாலும் சரி, தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாக இருந்தாலும் சரி, தொழில் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்க தயாராக உள்ளது.
உங்களின் முதலீடு மற்றும் எங்களின் புதுமைகளை புகுத்துதல் நடைமுறைகள் சேர்ந்து வியப்பை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படும். உங்களின் நம்பிக்கையும், எங்களின் தொழில்நுட்ப திறனும் சேர்ந்து இலக்கை அடைய செய்யும். உலகம் சந்திக்கும் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கிறது. அதனால் நீங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
இளைஞர் சக்தி
இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை புகுத்தும் நடைமுறைகள் உலக நாடுகளை கவர்ந்துள்ளது. ஆனால் நமது எதிர்காலம் தற்போது உள்ள நிலையை விட பெரியதாக இருக்கும். இந்தியாவிடம் புதுமைகளை புகுத்தும் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலக நாடுகளுக்கு தெரியும்.
தொழில்நுட்பம் மற்றும் திறன் ஆகியவை உலக மயமாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். சுகாதாரம், நிர்வாகம், நிதி போன்ற பல்வேறு துறைகளில் இளம் இந்தியர்கள் முக்கிய பதவியில் உள்ளனர். உலகின் நன்மைக்காக எங்கள் திறமையை பயன்படுத்துகிறோம். அவர்களின் நிர்வாக திறனின் தாக்கம் இந்தியாவிலும் பார்க்க முடிகிறது.
புத்தொழில் நிறுவனங்கள்
நடப்பு ஆண்டில் புதுமைகளை புகுத்துவதில் இந்தியா 40 இடங்கள் முன்னேறியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா 81-வது இடத்தில் இருந்தது. கடந்த 2021-ம் ஆண்டுக்கு பிறகு புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்), ரூ.8 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்யும் (யுனிகார்ன்) நிறுவனங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. உலகின் 3-வது பெரிய புத்தொழில் நிறுவனங்களின் குவிமையமாக இந்தியா திகழ்கிறது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 81 ஆயிரம் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு இந்தியாவில் திறமை குவிந்திருப்பதே காரணம் ஆகும். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்திய இளைஞர்கள் திறன் மிக்கவர்களாக மாறி வருகிறார்கள்.
இணைய புரட்சி
இந்தியாவில் செல்போன் மற்றும் இணைய புரட்சி நடந்து வருகிறது. நாட்டில் அகன்ற அலைவரிசை இணைய தொடர்புகளின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் 6 கோடியில் இருந்து 81 கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல் ஸ்மார்ட் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1½ கோடியில் இருந்து 75 கோடியாக அதிகரித்துள்ளது. நகரங்களை விட கிராமங்களில் இணைய வசதி பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
நீண்ட காலமாக தகவல் தொழில்நுட்பம் சில குறிப்பிட்ட துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உயர்ந்த மற்றும் பலம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே தொழில்நுட்பம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்தியா, தொழில்நுட்ப பயன்பாட்டை எப்படி பரவலாக்குவது என்பதை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளது. தொழில்நுட்பத்தை எவ்வாறு மனிதர்கள் கையாள்வது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நடத்தினோம். அதை 'கோவின்' என்ற தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செயலி மூலம் மேற்கொண்டோம். நாட்டில் ஆன்லைன் மூலம் நிறைய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பாடப்பிரிவுகள் அவற்றில் கிடைக்கின்றன. 1 கோடி பேருக்கு கல்வி சான்றிதழும் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் ஆன்லைன் மூலமாக, இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. உலகில் இந்தியாவில் தான் இணைய கட்டணம் குறைவாக உள்ளது. இந்த குறைந்த கட்டணம் காரணமாக கொரோனா காலத்தில் ஏழைகளின் குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். இந்த வசதி இல்லாமல் இருந்திருந்தால் குழந்தைகளுக்கு 2 முக்கியமான ஆண்டுகள் வீணாகி இருக்கும்.
கடன் உதவி
வறுமைக்கு எதிரான போரில் தொழில்நுட்பத்தை இந்தியா ஆயுதமாக பயன்படுத்துகிறது. "ஸ்வாமித்வ'' திட்டத்தின் கீழ் பறக்கும் கேமராக்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மக்களுக்கு சொத்து அட்டை வழங்கப்படுகிறது. இது நில பிரச்சினைகளை குறைக்கிறது.
இந்த திட்டத்தால் மக்கள் தங்களின் சொத்து மூலம் நிதி மற்றும் கடன் உதவிகளை பெற முடிகிறது.
சிறுதொழில் நிறுவனங்கள்
ஆனால் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை இந்தியா வெளிக்காட்டியது. ஜன்தன், ஆதார், செல்போன் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதால், மக்களுக்கு பண உதவிகளை நேரடியாக வழங்க முடிந்தது.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுதொழில் நிறுவனங்களுக்கும் உதவி செய்தோம். நாங்கள்(பா.ஜனதா அரசு) ஒரு படி முன்னால் சென்று, தெருவோர வியாபாரிகளுக்கும் தொழில் செய்ய நிதி உதவி வழங்கினோம்.
வெளிப்படைத்தன்மை
மின்னணு வர்த்தகத்தை அரசு நடத்துவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. ஆனால் அது இந்தியாவில் நடந்துள்ளது. இந்தியாவில் மின்னணு மார்க்கெட் வசதி உள்ளது. இதை ஜி.இ.எம். (ஜெம்) என்று அழைக்கிறோம். இதில் சிறு வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த தொழில்நுட்ப பயன்பாடு, ஊழலை குறைத்துள்ளது. இது வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இடர்பாடுகளுக்கு முடிவு கட்டவும், இரு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் செயல்படவும், சேவையை உறுதி செய்யவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு மோடி பேசினார்.
20 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு நாளை (வௌ்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்சு உள்பட 20 நாடுகளை சேர்ந்த மென்பொருள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.