100 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வந்த சஞ்சய் ராவத் சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு...!


100 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து ஜாமினில் வந்த சஞ்சய் ராவத் சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு...!
x

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ந் தேதி (இன்று) வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் கிடைத்ததையடுத்து 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் ராவத், விடுதலையானதை தொடந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் சிறையில் வெளியே வந்த சஞ்சய் ராவத்துக்கு சிவசேனா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், 100 நாட்கள் சிறையில் இருந்து இன்று ஜாமினில் வெளியே வந்த சஞ்சய் ராவத் மும்பையில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மத்திய மும்பையின் பிரபாதேவி நகரில் உள்ள மிகவும் பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்ற சஞ்சய் ராவத் வழிபாடு நடத்தினார்.

சஞ்சய் ராவத் உடன் அவரது சகோகதரரும் எம்.எல்.ஏ.வுமான சுனில் ராவத் மற்றும் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் சித்தி விநாயகர் கோவிலுக்கு வழிபாடு நடத்தினர்.


Next Story