கோவா வளர்ச்சிக்காக 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு: ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி பேச்சு


கோவா வளர்ச்சிக்காக 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு:  ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி பேச்சு
x

கோவாவின் வளர்ச்சியை வலுப்படுத்த மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.


புதுடெல்லி,


உலகில் மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. பரப்பளவில் சீனாவுடன் ஒப்பிடும்போது, மிக சிறிய நாடாக இந்தியா உள்ளது.

ஒருபுறம் வளங்கள் பல நிறைந்த நாடாக இருந்தபோதும், வேலையில்லா திண்டாட்டமும் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், இளைஞர்களின் கனவை பூர்த்தி செய்யும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டம் சமீபத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை அவர் வழங்கினார்.

குஜராத்தில் 13 ஆயிரம், காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டன. எனினும், இந்தியாவின் கிராமப்புற பகுதிகள் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றன. கிராமப்புற வேலையில்லா திண்டாட்டம் கடந்த 6 ஆண்டுகளாக 7.02 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என எதிர்க்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்தில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கு 35 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில், 16 கோடி வேலைகள் எங்கே என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், ரோஜ்கார் மேளா திட்டத்தின்படி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கோவாவில் நடத்தப்படும் ரோஜ்கார் மேளாவில் வீடியோ வழியே பிரதமர் மோடி பேசினார்.

அவர் கூறும்போது, கோவா ரோஜ்கார் மேளா வழியே இளைஞர்கள் நியமன கடிதங்களை பெறுகின்றனர். உங்களது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த 25 ஆண்டுகள் தற்போது துவங்குகின்றன. 2047-ம் ஆண்டில் நாட்டின் மற்றும் கோவாவின் வளர்ச்சியை உறுதி செய்வது தற்போது உங்களிடம் உள்ளது என பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தொடர்ந்து, நாட்டில் பா.ஜ.க. ஆளக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் ரோஜ்கார் மேளா ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

கோவா அரசும் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பும் வேலைகளில் இறங்கியுள்ளது. அதிக அளவில் நியமன கடிதங்கள் இன்று வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

வரவுள்ள மாதங்களில் கோவா காவல் துறையும் ஆள்சேர்ப்பில் ஈடுபடும். அது கோவா காவல் துறையை வலிமையாக்கும்.

கோவாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் முதலீடு செய்துள்ளது. கோவாவின் மொப்பா நகரில் விமான நிலையம் கட்டமைக்க ரூ.3 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு உள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. கோவா சுற்றுலா துறை மெகா திட்டம் மற்றும் கொள்கை வழியே வளர்ச்சி பணிகளை அமல்படுத்த பல்வேறு வழிகளை கோவா அரசு கண்டறிந்து உள்ளது. இது, மாநில சுற்றுலாவில் மிக பெரிய முதலீட்டை கொண்டு வரும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


Next Story