ஒடிசாவில் ரெயில் விபத்து எதிரொலி: பெங்களூரு-ஹவுரா, காமக்யா உள்பட 3 ரெயில்கள் ரத்து


ஒடிசாவில் ரெயில் விபத்து எதிரொலி: பெங்களூரு-ஹவுரா, காமக்யா உள்பட 3 ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:45 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தால், பெங்களூருவில் இருந்து ஹவுரா, காமக்யா செல்லும் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் பயணிகள் வசதிக்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தால், பெங்களூருவில் இருந்து ஹவுரா, காமக்யா செல்லும் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் பயணிகள் வசதிக்காக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

3 ரெயில்கள் மோதல்

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற ரெயில் உள்பட 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால், இறப்பு எண்ணிக்கை உயரும் என கூறப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால், பெங்களூருவில் இருந்து புறப்படும் சில முக்கிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டிக்கெட் கட்டணம்

மேலும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3 ரெயில்கள் மோதி கொண்டதையடுத்து, பெங்களூருவில் இருந்து கவுகாத்திக்கு புறப்பட்ட ரெயில் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் ரெயிலில் பயணிக்க இருந்தவர்கள், பையப்பனஹள்ளி மற்றும் எஸ்.எம்.வி.டி.(சர்.எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம்) ரெயில் முனையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் டிக்கெட் பணத்தை தருமாறு கூறி, ரெயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்ட அகன்ற திரையில் ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் மற்றும் உதவி மைய எண்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரெயில்கள் ரத்து

விபத்து சம்பவத்தால் ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்காக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கூட்டம், கூட்டமாக ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், அவர்கள் அங்கேயே படுத்து ஓய்வு எடுத்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி சத்யமூர்த்தி கூறுகையில், 'ஒடிசாவில் நடைபெற்ற ரெயில்கள் விபத்தால், கர்நாடகத்தில் இருந்து ஒடிசா வழியாக செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் பெங்களூருவில் இருந்து காமக்யா செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்:12551), ஹவுரா செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்:12864) மற்றும் பாகல்புரா செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்:12253) ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன' என்றார்.


Next Story